செப் 3,
நாகூரில் மஜக வின் நகர துணைச் செயலாளர் G.செளகத் அலி மற்றும் M.சாஜிதா பர்வீன் ஆகியோரின் திருமணத்தில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு..
கொரோனா நெருக்கடி காலத்தில் இத்திருமண விழாவில் நாம் பங்கேற்றிருக்கிறோம்.
கொரோனா தொற்று உலகையே மிரட்டி ஊரடங்கில் வைத்திருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது, பொருளாதாரத்தை முடக்கியிருக்கிறது.
ஆயினும் வேறு பல நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. காற்று தூய்மையடைந்திருக்கிறது. நதிகள், நீர் நிலைகள் சுத்தமாகியிருக்கிறதுசுற்றுச்சூழல் நலன் மேம்பட்டிருக்கிறது. விபத்துகள் குறைந்திருக்கிறது.
இந்த வரிசையில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெறும் நிலையும் உருவாகியிருக்கிறது.
குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என குறைவான பங்கேற்பாளர்களோடு திருமணங்கள் நடைபெறுவது ஒரு ஆரோக்கியமான மாற்றமாகும்.
1000 பேர், 5 ஆயிரம் பேர் என சக்திக்கு மீறி எல்லோரையும் திருமண நிகழ்வுகளில் கூட்டுவது என்பதும், 10 லட்சம், 20 லட்சம் என செலவுகள் செய்வதும் ஒரு அந்தஸ்து என மாறிய நிலையில், கொரோனா காரணமாக இப்போது குறைந்த செலவில் திருமணங்களை நடத்துவதை வரவேற்க வேண்டும்.
பிறரை பார்த்து நாமும் அது போல் திருமணம் நடத்த வேண்டும் என்ற மனநிலை மாறியிருக்கிறது. நடுத்தர மக்களின் பொருளாதாரம் மிச்சப்பட வழி பிறந்திருக்கிறது.
வசதியுடையவர், வசதி குறைந்தவர் என எல்லோரும் ஒரு சமநிலைக்கு வந்திருப்பதும், ஆடம்பரங்கள் குறைந்திருப்பதும் நல்ல விஷயங்கள் ஆகும்.
கொரோனா பல வகையான பாடங்களையும், எச்சரிக்கைகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.
டிசம்பர் மாதம் வரை கொரோனாவின் தாக்கம் தொடரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் பொருளாதார பாதிப்பு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையாக இருக்கும்.
எனவே சிக்கனமான வாழ்வு முறைக்கு எல்லோரும் மாறுவது தவிர்க்க முடியாதது.
சிலர், நிலைமை அடுத்த மாதம் சீராகிவிடும் என நம்பி, நகைகளை அடமானம் வைத்து வட்டிக் கட்டுகிறார்கள். வட்டிக்கு வட்டி என உயர்ந்து அது மேலும் கஷ்டத்தை கொடுக்கும். அந்த தவறை செய்யாமல் மாற்று வழி காண வேண்டும்.
வெளிநாடுகளில் வருமானம் ஈட்டக் கூடியவர்களின் குடும்பங்கள் பாடும் திண்டாட்டம்தான். ஏனெனில் அங்கும் கொரோனா காரணமாக வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு கவலையளிக்கிறது. அது தாயகத்தில் எதிரொலிக்கும்.
எனவேதான் சிக்கனம், சேமிப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறோம்.
அரசு சில தளர்வுகளை அறிவித்திருப்பதால், கொரோனா முடிந்துவிட்டது போல பலர் நினைக்கிறார்கள். இனி ஆபத்தும் அதிகம் இருக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.
கவிஞர் வைரமுத்து அவர்கள் இது குறித்து ஒரு ட்விட்டர் பதிவு வெளியிட்டார். “காடுகள் பற்றி எரிகிறது. பறவைகளே எச்சரிக்கை” என்று நடப்பு யதார்த்தத்தை இலக்கிய மொழியில் சுட்டிக்காட்டினார்.
எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முககவசங்கள் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் பின்பற்ற வேண்டும். நாம் பிறருக்கு இதில் முன் மாதிரியாக திகழ வேண்டும்.
கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொது விதிமுறைகளை மூஃமின்கள் (இறை நம்பிக்கையாளர்கள்) பின்பற்றுவது சமூக பொறுப்பு என உலகம் எங்கும் வாழும் மார்க்க அறிஞர்கள் ஆலோசித்து ஃபத்வா ( தீர்ப்பு) வழங்கியுள்ளதை நினைவூட்டுகிறேன்.
இத்தருணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் கிசிச்சை பெறும் அனைவரும் நலம் பெற இத்திருமண நிகழ்வில் நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
இந்த மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.
“இறைவா…
அகத்திலும், புறத்திலும் இவர்களுக்கு அபிவிருத்தி செய்வானாக… நன்மையான காரியங்களில் இவர்களை இணைத்து வைப்பாயாக..
என்ற நபி வழி வாழ்த்தினை கூறி நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமணத்தில் புதுவை மாநில சட்டமன்ற உறுப்பினர் KAU. அசனா MLA, அவர்களும் பங்கேற்றிருந்தார்.
இந்நிகழ்வில் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர்.
இதில் மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், பொருளாளர் சகத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது(கண்ணுவாப்பா), மாவட்ட அணி நிர்வாகிகள் ஆரிஃப், ரெக்ஸ் சுல்தான், நாகூர் நகர நிர்வாகிகள் அபூசாலிஹ் சாஹிப, சாகுல் ஹமீது, அரபாத், யூசுப், ஜுபைர், மஸ்தான், அஷ்ரப் சாஹிப், ரபிக் மரைக்காயர், சதாம் ஹுசைன், ஜாகிர் ஹுசைன், நூர்தீன் சாஹிப், மஞ்சை சதாம், திட்டச்சேரி இப்ராஹிம் மற்றும் நாகூர் தம்ஜுதீன், சம்பத்குமார் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#நாகை_மாவட்டம்
03.09.2020