You are here

வசந்தக்குமார் MP மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான வசந்தகுமார் MP அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம்.

தற்போதைய சட்டமன்றத்தில் நாங்கள் ஒன்றாக பணியாற்றினோம். எனக்கு பின் வரிசையில் அவருக்கு இடம் என்பதால், அதிகம் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அவர் கட்சி சார்பற்று அனைவருடனும் சிரித்து பேசி மகிழ்பவர். எப்போதும் உற்சாகமாக இருப்பார்.

அவர் அவையில் பேசும் போதெல்லாம் நகைச்சுவை கலந்து தொகுதி கோரிக்கைகளை முன்வைப்பார். அமைச்சர்கள் சிரித்துக் கொண்டே அவரின் கோரிக்கைகளை ஆமோதிப்பார்கள்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆற்றல் மிகு கொள்கையாளரான அவருக்கு, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது.

தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டிய அவர், நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி நட்சத்திரமாய் பிரகாசிப்பதற்கு முன்பாகவே உதிர்ந்துப் போனது வேதனையளிக்கிறது.

அரசியலை கடந்து தொழிற்துறையிலும் அவர் வித்தகராக திகழ்ந்தார். கடின உழைப்பால் உயர்ந்து, வசந்த் & கோ என்ற நிறுவனத்தை கட்டியமைத்து, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியது அவரது நிர்வாக திறமைக்கு ஒரு சான்றாகும்.

அரசியல், வணிகம், ஊடகம் என பல துறைகளிலும் முத்திரை பதித்த அவர்,
கொரோனா எனும் கொரில்லா தாக்குதலுக்கு ஆளாகி உயிர் துறந்துள்ளது வேதனையளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், காங்கிரஸ் பேரியக்கத்தினர், அவரது அபிமானிகள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
28.08.2020

Top