ஆகஸ்ட் 15,
இந்திய சுதந்திர தின விழாவையொட்டி ஐரோப்பிய பெரியார்- அம்பேத்கார் தோழர்கள் கூட்டமைப்பு சார்பில் காணொளி கருத்தரங்கு நடைப்பெற்றது.
தோழர் விஜய்அசோகன், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வல்லம் பஷீர் அவர்கள் முன்னுரையாற்றினார்.
இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தமிழர்கள் மட்டுமின்றி, உலகம் எங்கும் வாழும் தமிழர்களும் பங்கேற்றனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு.
இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நமது விடுதலைக்காக போராடிய தமிழ் போராளிகளை நினைவு கூற விரும்புகிறேன்.வரலாறு பிரபல தேசிய தலைவர்களை மட்டுமே போற்றுகிறது. நாம் எல்லோரையும் போற்ற வேண்டும். மன்னர்கள்,தலைவர்கள், தளபதிகள், வீரர்கள் என பலரின் தியாகங்கள் வழியே தான் சுதந்திரம் மலர்ந்தது.
பூலித்தேவன், கட்டபொம்மன், மருதநாயகம், தீரன் சின்னமலை, ஒன்டி வீரன், வீரன் அழகுமுத்துக் கோன், வீரன் சுந்தரலிங்கம் , மருது சகோதர்கள் என பல மாவீரர்களின் தியாகங்களையும் நாம் போற்ற வேண்டும்.
பின்னாளில் காந்தியடிகள், நேரு, அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கார் போன்றோர் அன்னியர்களிடமிருந்து அஹிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்றார்கள்.
அவர்கள் கண்ட கனவு இப்போது நிறைவேறியிருக்கிறதா? என சிந்திக்க வேண்டியுள்ளது. அவற்றிலிருந்து நாட்டை திசை மாற்றும் வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கவிஞர் வைரமுத்து இந்திய சுதந்திரம் குறித்து ஒரு கவிதை எழுதினார்.
*”அவன் பட்டு வேட்டியைப் பற்றிய கனவில் இருந்த போது….கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது”*
அப்படிதான் இன்றைய நிலை மாறியிருக்கிறது. நாட்டின் பல துறைகளிலும் ஆபத்துகள் ஏற்பட்டிருக்கிறது.
ஊடகத்துறையின் சுதந்திரம் நெறிக்கப்படுகிறது. எது தலைப்பு செய்தியாக வரவேண்டும்? யார், யார் விவாதத்திற்கு அழைக்க வேண்டும் என்பதை சிலர் வெளியிலிருந்து தீர்மானிக்கிறார்கள்.
நீதிமன்ற ஜனநாயகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளே டெல்லியின் வீதிகளில் இறங்கி நீதித்துறையை காப்பாற்றுங்கள் என பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியதை நீங்கள் அறிவீர்கள்.
சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை என்ற பெயரால் நமது வனங்களையும், வளங்களையும், விவசாய நிலங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க துடிக்கிறார்கள்.
விவசாயி, கூலித் தொழிலாளி உள்ளிட்ட கிராமப்புற மக்கள், பின்தங்கிய சமூகங்களை சேர்ந்தவர் கள் வீட்டுப் பிள்ளைகள் உயர் கல்வி பெறக் கூடாது என்பதற்காக புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்திருக்கிறார்கள்.
3ஆம் வகுப்புக்கும், 5 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வாம். ஆரம்பத்திலேயே இவர்களை வடிகட்டி விட்டால், உயர் கல்விக்கு செல்லவிடாமல் தடுக்கலாம் என்பதும், பிறகு இட ஒதுக்கீட்டீ ற்கு ஆள் இல்லாமல் செய்து விடலாம் என்பதும் அவர்களின் திட்டமாகும்.
அதன் வழியாக மொழி திணிப்பையும் செய்ய துடிக்கிறார்கள். மாநில உரிமைகளை பறிக்கிறார்கள். மதத்தை வைத்து பிரிவினை செய்கிறார்கள். மதவாதம் முன்னிறுத்தப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1949, நவம்பர் 25 அன்று பேசியதை இப்போது எடுத்தாள விரும்புகிறேன்.
“இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு மேலாக நாட்டை கருதப் போகிறார்களா? அல்லது நாட்டை விட மத நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க போகிறார்களா? இது எனக்கு தெரியாது. அரசியல் கட்சிகள் நாட்டை விட மதக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நமது சுதந்திரத்திற்கு இரண்டாவது முறையாக ஆபத்து நேர்ந்து விடும். நாம் பெற்ற சுதந்திரத்தை இழக்க நேரிடும்.
இந்த விளைவுகளுக்கு எதிராக நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். *நமது கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை நமது சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்*” என அம்பேத்கார் கூறினார்கள். அதை இந்நாளில் எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.இன்று இது குறித்து எல்லோரும் சிந்திக்க. வேண்டும்.
ஃபாஸீஸ்டுகள் தேச நலன், வளர்ச்சி பற்றி பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படி பேசி தங்கள் ரகசிய செயல் திட்டங்களை நிறைவேற்ற நினைப்பார்கள்.
*சுதந்திரப் போராட்ட காலத்தில் பேசப்பட்ட தேசியவாதம் என்பது முற்போக்கானது.* இப்போது சிலர் பேசும் தேசியவாதம் என்பது ஆபத்தானது. பிரிவினை எண்ணம் கொண்டது.
மக்களின் கண்களை கட்டவும், ஏமாற்றவும், உண்மையாக பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவும் ஒரு தேசியவாதம் பயன்படுமேயானால் அது போலி தேசியவாதமாகும்.
தேசியவாதம் என்பது அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றை கொண்டதாக இருக்க வேண்டும்.
இன்று கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கிறார்கள். உரிமைகளை பறிக்கிறார்கள்.
மதங்களாக , சாதிகளாக, இனங்களாக, பிராந்தியங்களாக வேறுபட்டிருக்கும் ஒரு தேசத்தில், தேச நலன், சமுதாய வளர்ச்சி, கல்வி சீர்த்திருத்தம் போன்றவற்றை அவற்றின் பார்வைகளோடு பேசாமல் , ஒரே நாடு – ஒரே சட்டம் – ஒரே திட்டம் என்று பொதுப்படையாக பேசுவது ஒன்று அறியாமையாக இருக்க வேண்டும். அல்லது ஏமாற்று வேலையாக இருக்க வேண்டும்.
இவர்கள் அறியாமல் செய்யவில்லை. அரசியல் பெரும்பான்மையின் பெயரால் திட்டமிட்டு செய்கிறார்கள்.
*கூட்டாட்சி தத்துவத்தை மலட்டுத்தன்மை கொண்டதாக மாற்ற நினைக்கிறார்கள். அதை அனுமதிக்க கூடாது.*
கொரோனா நெருக்கடியில் மக்கள் ஊரடங்கில் இருக்கும் பலஹீனமான நிலையை பயன்படுத்தி, தங்கள் திட்டங்களை மத்திய பாஜக அரசு ஒன்றன் பின் ஒன்றாக திணித்து வருகிறது.
தந்தை பெரியார் அவர்கள் அரசியல் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் ? என விளக்கினார்..
அரசியல் நிர்வாகம் பொதுவாக இருக்க வேண்டும் என்றும் மக்களின் நலன்களை அந்த நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றவர், எளியோரை செல்வந்தர்கள் கொடுமைப்படுத்தாமலும், நல்லவர்களை போக்கிரிகள் தொல்லைப்படுத்தாமலும், பாமரர்களை காட்டு ராசாக்கள் கொள்ளையடிக்காமலும் இருக்க வேண்டும் என்றார்.
இந்தியாவில் மதமும், அரசியலும், பொருளாதாரமும், சமூக வாழ்வும் வகுப்பு பேதத்தை அடிப்படையாக கொண்டே இருந்து வருகிறது. அதனால் சமூகத்தில் சிலர் மேலாகவும், பலர் கீழாகவும் வாழ வேண்டியிருப்பதுடன் மக்களுக்கு சுய மரியாதை உணர்ச்சியும் இல்லாமல் போய் விட்டது என்றார்.
பெரியாரின் இந்த கருத்துகளை இன்று நடக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநில அரசுகள் கொர ணாவில் மக்களுக்கு நிதியுதவி செய்தன. மத்திய அரசு இதுவரை நேரடியாக 100 ரூபாய் கூட நேரடி நிதியுதவியை யாருக்கும் வழங்கவில்லை. ஆனால், பிரதமர் கை தட்ட சொன்னால் ஒரு கூட்டம் கை தட்டுகிறது. வட இந்திய மக்களின் குறிப்பாக இந்தி பேசும் மக்களின் பாமரத்தனத்தை தங்கள் அரசியலுக்கு அவர்கள் உரமாக பயன்படுத்துகிறார்கள்.
இந்த நேரத்தில் மார்க்ஸியவாதிகள், திராவிட இயக்க வாதிகள், தமிழ் தேசியவாதிகள், அம்பேத்காரிஸ்டுகள் என ஜனநாயக சக்திகள் ஒரணியாக திரண்டு சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்க அமைதி வழியில் போராட வேண்டும்.
ஆதிக்க சக்திகளுக்கு ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.
*பட்டம் பறவையாக முடியாது. அது போல சர்வாதிகாரம் வெற்றி பெற முடியாது.*
பிரபல லெபனான் கவிஞன் கலீல் ஜிப்ரானின் கவிதையை கூறி என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
*ஆழ்கிணற்றுக்குள் அடங்கி வாழும் தவளையை விட…* *தீம்பிழம் போடு போராடி மடியும் விட்டில் பூச்சியே மேலானது.*
கடல் கடந்து சென்றாலும், தமிழ் உணர்வோடு, சித்தாந்த சிந்தனைகளோடு வாழும் ஐரோப்பிய பெரியாரியார் – அம்பேத்கார் தோழர்கள் பேரவைக்கு புரட்சிகர வாழ்த்துக்களை கூறி விடைபெறுகிறேன். நன்றி.
அவர் பேசி முடித்ததும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
15.08.2020