ஆபத்துகள் சூழ்ந்த புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

நாடு முழுக்க எதிர்ப்புகளை சந்தித்த மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது.

சாமானியர்களும் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளே துணை நின்றன. இப்போது அதற்கும் பொது நுழைவுத் தேர்வு என்பது ஏற்க முடியாததாகும்.

நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி கடினமாக்கப்பட்டது போல, இது கலை, அறிவியல் படிப்புகளையும் கடினமாக்கிடும் முயற்சியாகும்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தேசிய தேர்வு முகமையின் மூலமே பொது நுழைவுத் தேர்வு என்ற முடிவு பெரும் பாதிப்புகளை உருவாக்கும்.

மும்மொழி கல்வி திட்டம் என்ற போர்வையில் மொழி ஆதிக்க திணிப்புக்கு திட்டமிடப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் தேசிய கல்வி ஆணையம் நாட்டின் அனைத்து கல்விகளுக்குமான உயர் பீடமாக இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தையும் இது கண்காணிக்கும் என்பதோடு, கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம், பாடத் திட்டங்கள் உருவாக்கல் , நிதி ஒதுக்கீடு போன்ற அனைத்தையும் இதுவே தீர்மானிக்கும் என்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வித்துறைகளை செயலிழக்க செய்துள்ளார்கள்.

இதன் மூலம் மாநில அரசுகள் தங்கள் அதிகாரங்களை இழந்துள்ளன.

ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்படும் என்பது CBSE போன்ற கல்வி திட்டத்திற்கும் பொருந்துமா? என்பதை தெரிவிக்க வில்லை.

தொழில் கல்வியில் பிற்போக்கு சிந்தனைகளை புகுத்தும் பழமைவாத போக்கு திணிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.

இதில் உள்ள சில அம்சங்கள் கல்வித்துறையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பன்னாட்டு கல்வி நிறுவனங்களுக்கும் உதவிடும் வகையில் சாதகமான அம்சங்களை கொண்டுள்ளன.

பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்திய ஒன்றியத்தில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் டாக்டர் அம்மா, டாக்டர் கலைஞர், ஆகியோர் கடுமையாக இதை எதிர்த்தனர்.

எனவே இதில் மாநில உரிமைகளை பறிக்கும் அம்சங்கள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய அம்சங்களை நீக்க வேண்டும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இதற்கு நாட்டு நலன் கருதி நாடு முழுக்க உள்ள மாநில அரசுகளும், ஜனநாயக சக்திகளும் தங்கள் எதிர்ப்பை வலுவாக தெரிவிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
30.07.2020