ப்ரன்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை தமிழக அரசு கலைக்க வேண்டும்! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் , பென்னிக்ஸ் என தந்தையும், மகனும் காவல் துறையால் அடித்து துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று வரை அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

அங்கு விசாரணைக்கு சென்ற நீதிபதியே அச்சுறுத்தலுக்கு ஆளான செய்தி நம் ஜனநாயக அமைப்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும்.

இச்சம்பவத்தின் பின்னணி குறித்து தினமும் வெளிவரும் தகவல்கள் புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே சாத்தான்குளம் படுகொலை சம்பவத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் என்ற அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாக வரும் செய்திகள் புதிய கேள்விகளையும், ஐயங்களையும் எழுப்பியுள்ளது.

அதில் குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு சேர்க்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இச்சந்தேகங்களை போக்கும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் என்ற அமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது?

யார், யாரை கொண்டு உருவாக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியவில்லை.

சிலரின் தவறுகள் காரணமாக தற்போது தமிழக காவல் துறையின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உருவாகியிருக்கும் நிலையில், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை பரவலாக காணப்படுகிறது.

இச்சூழ்நிலையில் காவல் துறையின் மாண்புகளை குலைக்கும் காவலர்கள் சட்டத்தின் வழியில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் வலிமைப்பட்டிருக்கிறது.

இச்சூழலில் தற்போது பரபரப்பாக குற்றம் சாட்டப்படும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் என்பது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பது மிகுந்த கவலையை தருகிறது.

இது குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை அளிப்பதோடு, அந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,

பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
02.07.2020