கறுப்புசட்டங்களுக்கு எதிரான TNTJ முற்றுகைப் போர்..! திணறியது சென்னை : மு.தமிமுன் அன்சாரி MLA ஆதரவு !


சென்னை.டிசம்பர்.28..,

மத்திய அரசின் CAA, NRC கருப்பு சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) சார்பில் நடத்திய கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் சென்னையை திணற வைத்துவிட்டது.

பெண்கள் உட்பட லட்சக்கணக்கானோர் திரண்டதால் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், பெருங்களத்தூர் எங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பேரணியில் TNTJ கொடிகளை விட தேசியக்கொடிகளே அதிகமாக நிறைந்திருந்தன.

சீருடை அணிந்த TNTJ தொண்டரணி, மகளிரணி என அணி, அணியாக காலை 11 மணிக்கு TNTJ தலைவர் சம்சுல்லுஹா தலைமையில் பேரணி தொடங்கியது.

இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் வருகை தந்து முன்வரிசையில் TNTJ தலைவர்களோடு அணி வகுத்தார். அவருடன் துணை பொதுச்செயலாளர் தைமிய்யா தலைமையிலான மஜக-வினரும் பங்கேற்றனர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக பேருந்துகள், வேன்கள் என வாகனங்களில் மக்கள் எழுச்சியோடு வருகை தந்திருந்தனர்.

பேரணியில் மோடி, அமித்ஷா எதிர்ப்பு கோஷங்கள் விண்ணை அதிர வைத்தன. அதில் “நாட்டை பிளக்காதே, மக்களை பிரிக்காதே” என்ற முழக்கம் முக்கியமானதாகும்.

பேரணி பிரம்மாண்ட எழுச்சியோடு ஆலந்தூர் கோர்ட் அருகே தொடங்கி, GST சாலையில் நுழைந்தது. எங்கு தொடங்கி எங்கு கூட்டம் நிற்கிறது என்று தெரியாத அளவிற்கு கூட்டம் லட்சக்கணக்கில் திரண்டது.

இடையில், அங்கு ஒரு ஸ்கூட்டியில் வந்த கோயில் குருவான ஐயர் ஒருவரை கூட்டத்தினர் வழிகாட்டி, பாதுகாப்பாக அனுப்பி வைத்தது போலீஸ் அதிகாரிகளால் பாரட்டபட்டது. கூட்டம் அந்த அளவிற்கு. நாகரீகமாக நகர்ந்தபடியே இருந்தது.

ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடியை தூக்கிக்கொண்டு TNTJ-வினர் அணிவகுத்ததும், அது உயரமான கட்டிடத்திலிருந்து பார்ப்போரை வியக்க வைத்தது.

வீடுகளில், கட்டிடங்களில் நின்றவாறு பொதுமக்கள் பேரணியை கண்டு களித்து, கையசைத்து ஆதரவு கூறினர்.

பேரணி நிறைவுற்றதும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாங்கள் புறப்படுகிறோம் என்றதும், TNTJ தலைவர்கள் சம்சுல் லுஹா அவர்களும், MS.சுலைமான் அவர்களும் நீங்கள் மேடைக்கு வந்து முழக்கமிட்டு செல்லுங்கள் என அழைத்ததும் அவரும் சென்று முழக்கமிட்டார்.

பிறகு TNTJ தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

பின்னர் TNTJ அமைப்பின் கோரிக்கைகளை ஆதரித்து, தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேரணியின் எழுச்சி குறித்து பேசினார். அப்போது TNTJ வலிமையான களப்பணியாளர்களை கொண்ட இயக்கம் என்றும், அது இன்று லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி உள்ளது என்றும் கூறினார்.

மத்திய அரசு கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும்,தமிழக அரசு இதை அமுல்படுத்த கூடாது என்றும் மீறி அமுல்படுத்தினால் அதை எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம் என்றும் இது மற்றுமொரு சுதந்திர போராட்டம் என்றும் அறிவித்தார்.

இந்த பேரணி ஒரு ஐக்கிய உணர்வையும் ஏற்படுத்தியிருப்பது பலராலும் பாராட்டப்படுகிறது.

இந்தப் பேரணிக்கு செல்லுமாறு சென்னை மக்கா பள்ளி உட்பட சுன்னத் ஜமாத் பள்ளிகளில் அறிவிப்பு கொடுத்ததை வரவேற்று TNTJ தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் பேசினார். இவ்விஷயத்தில் நாங்கள் பேதமின்றி இணைந்து இருப்பதாக கூறியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த பேரணி மூலம் TNTJ அமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் கைக் குழந்தைகளோடு பேரணியில் அணிவகுத்ததும், முழக்கங்கள் எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையை உலுக்கிய இப்பேரணி மத்திய மாநில அரசுகளை மிரள வைத்திருக்கிறது என்பதே உண்மை.

#தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
28-12-2019