(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)
பொதுசிவில் சட்ட சர்ச்சைகளும், விவசாயிகள் தற்கொலைகளும், போபால் என்கவுண்டர் சர்ச்சைகளும், புதிய கல்வி கொள்கை குறித்த விமர்சனங்களும், நாட்டை உலுக்கி இருக்கும் நிலையில் அதையெல்லாம் திசை மாற்றும் வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியின் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கு, கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என வண்ணமயமான காரணங்களை கூறியிறுக்கிறார்கள்.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற மோடியின் தேர்தல் வாக்குறுதி இப்போது மறக்கடிக்கப்பட்டுறிக்கிறது.
நாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் 10 சதவீதம் பேர்தான் எனும் நிலையில், அவர்கள் அதை சொத்துக்களாகவும், தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருட்களாகவும்தான் வைத்திருப்பார்கள். எல்லோரும் 500,1000 ரூபாய் நோட்டுகளாகதான் வைத்திருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்?
பிரதமர் மோடியின் அறிவிப்பால் நடுத்தர மக்கள் மிகவும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
குறைந்த பட்சம் 1 வார கால அவகாசமாவது கொடுத்திருக்கலாம் என்ற மக்களின் குரல்களை நாடெங்கும் கேட்க முடிகிறது.
திருமணம், புதுவீடு என பல கனவுகளோடு வீட்டில் பணத்தை சேமித்து வைத்திருக்கும் கோடிக்கனக்கான மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் இப்பிரச்சனையை மத்திய அரசு கையாள வேண்டும்.
சீர்திருத்த முயற்சிகள் சாமான்ய மக்களின் கனவுகளையும், அன்றாட வாழ்க்கையையும் நொறுக்காமல் முன்னெடுக்கப் படவேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
இவண்
M. தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி