குவைத் KTIC நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!

ஏப்ரல்:15, வளைகுடா சுற்றுபயணத்தின் ஒரு பகுதியாக குவைத் வந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சி யின் பொதுசெயலாளர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அவர் இன்று குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-TIC) ஏற்பாடு செய்த அமர்வில் ‘பத்ரு யுத்தம் ஏற்படுத்திய மைல்கல் ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

இது ரமலான் நோன்பின் நடுப்பகுதி.

இதில் பத்ரு யுத்தம் குறித்து பேசும் போது; அந்த வரலாற்றில் பயணிக்கும் போது ; நமது உடல் சிலிர்ப்பதை தவிர்க்க முடியாது.

பெரும்படையை சிறு படையினர் வெற்றி கொண்ட வரலாறு இது.

பெரும் படையுடன் வந்த மாவீரன் அலெக்ஸாண்டரை, வடமேற்கு இந்தியாவில் ஜீலம் நதிக்கரையில், மன்னன் போரஸ் எதிர்த்து நின்று போரிட்டான். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இப்படி பல வரலாறுகள் உண்டு.

இங்கே வரலாறு வேறு.

ஆயிரம் பேர் கொண்ட எதிரிப்படையை, நபிகள் நாயகத்தின் தலைமையிலான 313 பேர் கொண்ட சிறு படை எதிர்த்து நின்று வீரச் சமர் புரிந்து வெற்றிக் கண்டது.

எதிரிகளை ஊடறுத்து சென்று தாக்கி அவர்கள் பெற்ற வெற்றி மகத்தானது. வரலாற்றில் புகழ் பூக்களால் சூழப்பட்டிருக்கிறது.

நபிகள் நாயகம் அவர்கள் போரை விரும்பியதில்லை.

தற்காப்பு யுத்தங்களை மட்டுமே நடத்தியுள்ளார்கள்.

மக்காவிலிருந்து சிரியாவுக்கு வணிகப் பயணம் மேற்கொண்ட அபு சுப்யான் என்றவரால் இப்போர் உருவானது.

மதீனாவை மையமாக கொண்ட நபிகள் நாயகத்தின் அரசு மீது அவர்கள் கொண்ட அச்சம் காரணமாக இப்போர் உருவானது.

அரபு தீபகற்பத்தின் தென்மேற்கு நோக்கி ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் ரமலான் பிறை 12 ல் திட்டமிடல் தொடங்கியது.,

பிறை 16 ல் அங்கு நபிகள் நாயகம் தலைமையிலான படை முகாமிட்டது.

ரமலான் பிறை 17 அன்று பத்ர் என்ற இடத்தில் போர் நடைபெற்றது.

இதன் பொது தேதி மார்ச் 17, கி.பி. 624 என ஆங்கில ஆண்டில் குறிப்பிடப்படுகிறது.

இது மூமின்களுக்கும் , அவர் தம் எதிரிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடி யுத்தமாகும்.

நபிகள் நாயகத்தையும் உள்ளடக்கி 313 கொள்கை தோழர்கள் களமாடினார்கள்.

இவர்களிடம் 2 குதிரைகளும், 70 ஒட்டகங்களும், சிறு ஆயுதங்களும் மட்டுமே இருந்தது. ஆனால் மலையளவு இறை நம்பிக்கை இருந்தது.

எதிர் தரப்பில் 1000 வீரர்களும், பெரும் கொண்ட ஆயுதங்களுடன் 100 குதிரைகளும், 170 ஒட்டகங்களும் இருந்தன.

இறைவா.. உன் திருநாமம் துதிக்கும் கூட்டம் இவ்வுலகில் இருக்க வேண்டுமெனில் எங்களுக்கு வெற்றியை தா … என நபிகள் நாயகம் அவர்கள் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்தார்கள்.

இந்த போரில் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், உறவு, நட்பு, குடும்பம் இவற்றை விட கொள்கையே முக்கியம் என்று கருதி நபிகள் நாயகத்துடன் , அவரது தோழர்கள் போரிட்டார்கள்.

ஏனெனில் எதிர்த்து நின்றவர்கள் மக்காவை சேர்ந்தவர்கள். முஹாஜிர்களான அவர்களது உறவுகள்.

இங்கு கொள்கையே வென்றது.

நபிகள் நாயகம் தரப்பில் 14 பேர் உயிர் தியாகம் செய்தார்கள். எதிர் தரப்பில் 70 பேர் கொல்லப்பட்டார்கள்.

பலர் சிறைபிடிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சித்ரவதை செய்யப்படவில்லை. போர் கைதிகளாக நடத்தப்பட்டார்கள்.

அங்கும் ஒரு கல்வி புரட்சி நடந்தது. நபிகள் நாயகம் அவர்கள் போர் கைதிகளை பார்த்து ,”உங்களில் கல்வி கற்றவர்கள், கவ்வியறிவு இல்லாதவர்களுக்கு கல்வியை கற்று கொடுங்கள். அப்போது கற்றவர்களுக்கும் விடுதலை, கற்றுக் கொடுத்தவர்களுக்கும் விடுதலை ” என்றார்கள்.

போரில் கூட நீதியை வகுத்தார்கள்.

மதகுருமார்களை கொல்லக் கூடாது. முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கு துன்பம் தரக்கூடாது. நிழல் தரும்; கனி தரும் மரங்களை வெட்டக் கூடாது. குடிநீரில் விஷம் கலக்கக் கூடாது என்றார்கள்.

ஐ.நா.சபையே இப்போது தான் இதையெல்லாம் வரையறுத்தது.

இந்த போர் வெற்றி கூறும் செய்தி இதுதான்….

பெரும்பான்மை வாதத்தை திணிக்க முயன்றால், ஆதிக்கத்தை புகுத்த நினைத்தால், இறைநம்பிக்கை கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவானவர்களாக; சிறுபான்மையினராக இருந்தாலும்; இறைவனின் உதவி இருந்தால் அவர்கள் வெற்றிப் பெறுவார்கள் என்பதுதான்.

நீதியும், அறமும் வெல்லும் என்பதுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது உரையில் K Tic அமைப்பின் பணிகளையும், செயல்பாடுகளையும் பாராட்டினார்.

இந்திகழ்வில் K tic அமைப்பின் தலைவர் மெளலவி முகமது நாசர், பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவி, பொருளாளர் திருபுவனம் ஜாகிர், உள்ளிட்டோர் பொதுச் செயலாளர் அவர்களுக்கு K tic அமைப்பின் விழா மலர் நூல்களை வழங்கி, சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

ஜூம்மா சிறப்பு தொழுகைக்கு பிந்தைய இந்நிகழ்வில் பங்கேற்ற பெரும்பாலோனோர் பொதுச் செயலாளர் அவர்களை சந்தித்து உரையாடினர். பிறகு படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கடல்கடந்து வாழ்வாதாரம் தேடிவந்துள்ள தமிழக மக்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

பொதுச் செயலாளர் அவர்களோடு குவைத் MKP மண்டல செய லாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்களுடன், மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது, மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கதுல்லாஹ், மண்டல துணை செயலாளர்கள் மாயவரம் சபீர், ஆயங்குடி நாசர், ஏனங்குடி பாஜில், மண்டல IKP செயலாளர் நீடூர் ஹாலிக், மண்டல செயற்குழு உறுப்பினர் அம்மாபேட்டை சையது அபுதாஹிர், நாச்சிகுளம் அப்துர் ரஹ்மான் மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்:

#மனிதநேய_கலாச்சார_பேரவை
#mkpitwing
#குவைத்_மண்டலம்
15.04.2022