கிரித்தவர்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும்!

அரியலூரில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..

அரியலூரில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு மற்றும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ‘இந்திய அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு’ நடைபெற்றது.

இதில், மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசியதாவது….

“தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் நடைபெற்றதை போன்ற வகுப்புவாத நிகழ்வுகள் தமிழ் நிலத்தில் எங்கும் நடைபெற்று விடக் கூடாது என்ற நோக்கில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

ஒப்பீட்டளவில் தமிழ்நாடும், கேரளாவும் சமூக நல்லிணக்கத்தில் இந்தியாவுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன.

தமிழகத்தை திராவிடமும், கேரளத்தை கம்யூனிசமும் பக்குவப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் முதிர்ச்சிமிக்கவர்கள்; தங்களை தாங்களே பக்குவப்படுத்திக் கொள்பவர்கள்.

இங்கு குஜராத் மாடலும், உ.பி. மாடலும் எடுபடாது.

அதற்கு ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் ‘சுர்ஜித்’ என்ற கிரித்தவ குடும்பத்து பிள்ளை விழுந்துவிட்டது.

அதை மீட்க அரசு போராடியது. தொலைக்காட்சிகள் அந்த முயற்சியை நேரலையாக பல நாட்கள் காட்டின.

அந்த குழந்தையை தங்கள் வீட்டு குழந்தையாக நினைத்து தமிழ்நாட்டு மக்கள் உருகினர்.

அக்குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதற்காக சர்வ மத பிரார்த்தனைகள் நடைப்பெற்றன.

அந்த சமயத்தில் தீபாவளி வந்தது.

பலரும் தீபாவளி வாழ்த்தை பதிவிட்டப்போது, ‘குழந்தை சுர்ஜித் மீட்கப்படுவார்!’ என்ற நம்பிக்கையோடு வாழ்த்தை பதிவிடுவதாக பகிர்ந்தனர்.

அந்த தீபாவளியை சோகத்தோடு கொண்டாடினர்.

அதுதான் இந்த தமிழ் மண்ணின் பண்பாடாகும். அதுதான் தமிழர்களின் உணர்வாகும்.

அப்படிப்பட்ட இம்மண்ணில் வகுப்புவாதத்தை புகுத்த முடியாது.

ஆட்டுக்குட்டிகளால் கொள்கை சிங்கங்களாக வாழும் தமிழர்களை மடை மாற்ற முடியாது.

இந்த நேரத்தில் நல்லெண்ணத்தோடு ஒரு கோரிக்கையை இம்மேடையின் வாயிலாக முன் வைக்கிறேன்.

கிரித்தவ சமுதாய மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும்.

பிரச்சனைகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ள அது உதவும்.

ஒருமுறை அம்பேத்கார் அவர்களை கிரித்தவ தலைவர்கள் சந்திக்க சென்றனர்.

அப்போது அம்பேத்கார் அவர்களும் இதைத்தான் ஆலோசனையாக கூறினார்.

நேர்மையாகவும், துணிச்சலாகவும் மனித உரிமை விழிப்புணர்வை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வரும் – மக்கள் கண்காணிப்பகத்தில் பயின்ற – சமூக செயல்பாட்டாளர்கள் முன்னின்று நடத்தும் – இம்மாநாட்டின் நோக்கங்கள் வெல்ல மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், ம.க.இ.க. தோழர்கள் பாடகர் கோவன் தலைமையில் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

இம்மாநாட்டில் தொல்.திருமாவளவன் MP., பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA., சின்னப்பா (மதிமுக) MLA., இனிகோ.இருதயராஜ் MLA., உள்ளிட்டோரும் பேசினர்.

தி.க., CPM, CPI, SDPI, த.வா.க உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் பேசினர்.

மஜக மாநில துணைச் செயலாளர்கள் நெய்வேலி இப்ராகிம், வல்லம் அகமது கபீர், அரியலூர் மஜக மாவட்ட செயலாளர் அக்பர், தஞ்சை மத்திய மாவட்ட மஜக பொறுப்புக்குழு தலைவர் அப்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசாருதீன், மஜக மருத்துவ சேவையணி மாவட்ட செயலாளர் அப்துல் ராஷித் உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

தோழர்கள் சசிக்குமார், இராஜன், இ.ஆசீர், அம்பிகா உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.