கல்வியில்_புதிய_திசைகளை_கண்டறியுங்கள்! – மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், மஜக

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய கல்வியாண்டை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நாம் முன்வைக்கும் முக்கிய வேண்டுகோள் என்னவெனில், புதிய வாய்ப்புகளை தரும் கல்விப்பிரிவுகளை தேடி செல்லுங்கள் என்பதே.

உதாரணத்திற்கு, மீன்வள அறிவியல் (B.FSc.,) படிப்பு !

900 கி.மீ கடற்கரை கொண்ட தமிழகத்தில், கடல் தொழில் சார்ந்த வருமானங்களை ஈட்டித் தரும் 4 ஆண்டுகால படிப்பு இது.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிகமான வேலை வாய்ப்புகளை தரக்கூடியது.

அதுபோல் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளுக்கு B.Sc.,(Agri) மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. மத்திய,மாநில அரசுப்பணிகளுக்கு செல்ல ஆர்வமுடையோர் இந்த படிப்பை முதுநிலை வரை தேர்வு செய்வது சிறந்தது.

வேளாண்மை கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தாவரவியல் (B.Sc., Botany) படிப்பை தேர்வு செய்து முதுநிலை வரை படிப்பது வாழ்க்கைக்கும், நாட்டிற்கும் நல்லது.

B.E படிப்பில் Agriculture Engineering என்ற படிப்பும் புதிய வாசல்களை திறந்திருக்கிறது.

விவசாயம் மற்றும் தோட்டக்கலை செழிக்க உலகம் எங்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு பெரும் நிதி செலவழிக்கப்படும் நிலையில், இத்துறையில் அதிக சம்பளத்தில் எளிதில் வேலை வாய்ப்புகள் காத்திருக்க்கின்றன.

அது போல் கால்நடை அறிவியல் துறையும் முக்கியமானது. B.VSc., என்ற 4 ஆண்டு கால படிப்பு உள்ளது.

நிகழ்காலத்தில் வேலைவாய்ப்புகளையும் , எதிர்காலத்தில் சுயத்தொழில் வாய்ப்புகளையும் எளிதில் தரக்கூடிய படிப்புகளில் இதுவும் ஒன்று.

விண்வெளி ஆராய்ச்சி துறைகளில் உலகம் கவனம் செலுத்தும் நிலையில் B.Tech., (Aerospace Eng.) மற்றும்
B.Sc., ( Astro Physics) போன்ற படிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கலாமின் கனவுகள் நிறைந்த துறைகள் இவை.

அது போல் பட்டப் படிப்புகளில் புதிய அணுகுமுறைகள் தேவை.

B.Com, B.Sc (கணினி) ஆகிய துறைகளில் குவியும் ஆர்வம் வேறு துறைகளிலும் செலுத்தப்பட வேண்டும்.

B.A வரலாறு, B.A சமூகவியல், B.A .பொருளாதாரம் போன்ற கலை படிப்புகள் போட்டிகளே இல்லாமல் முன்னேறும் வாய்ப்புகளை கொண்டவை. சமூகத்தின் வாழ்வியல் திசைகளை தீர்மானிக்க கூடியவை.

B.A ஆங்கிலம் இன்று மீண்டும் பொற்காலத்தை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

இதில் B.A(Defence) படிப்பு ராணுவம், இரயில்வே, கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் வேலை வாய்ப்புகளை தரக்கூடியது.

அது போல் B.Sc மைக்ரோ பயோலஜி , பயோ கெமிஸ்ட்ரி போன்ற உயிரி தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகள் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் படைத்த துறைகளாகும்.

B.Sc (Geology) என்ற படிப்பு நிலக்கரி சுரங்கங்கள், தொல்பொருள் ஆராய்ச்சி, நீர் சுத்திகரிப்பு, பெட்ரோலியத் துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்புகளை தரக்கூடியது.

B.Sc (Forensic Science) தடய அறிவியல் துறை, துப்பறியும் துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்புகளை தரக்கூடியது.

B.Sc பிரிவில் Fire and industrial Safety Management என்ற படிப்பு மின்சாரத் துறை, தொழிற்சாலை மேலாண்மை, பேரழிவு மேலாண்மை ஆகியவற்றில் வேலை வாய்ப்புகளை தரக்கூடியது.

இது போன்ற புதிய துறைகள் குறித்து மாணவ, மாணவிகள் கவனம் செலுத்த வேண்டும்.

எனக்கு தெரிந்தவர் இதை படிக்கிறார்… எனவே அதையே நானும் படிக்கப் போகிறேன் என்ற மனநிலை பலருக்கும் உள்ளது. அது மாற வேண்டும்.

மாறி வரும் புதிய உலகின் சவால்களை எதிர்கொள்ளும் துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வானம் வெகுதூரம் தான். நாம் சிறகடித்து பறக்க முயற்சிகள் தேவை.

நமது கனவுகள் கைக்குட்டைகளுக்கானதாக இருக்கக் கூடாது.

மேகங்களை கைப்பற்றுவதற்கானதாக இருக்க வேண்டும்!

வாழ்த்துக்கள்.