வெளிநாடு வாழ் தமிழர்களை இலவசமாக அழைத்து வர வேண்டும் மனிதநேய ஜனநாயக கட்சி செயற்குழுவில் போராட்டம் அறிவித்து தீர்மானம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் 8 ஆவது தலைமை செயற்குழுக் கூட்டம் இணைய வழியாக இன்று (03.06.2020) அவைத் தலைவர் நாசர் உமரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கட்சியின் பணிகள் குறித்தும் திட்டமிடல் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

துணைப்பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் அவர்கள் தீர்மானங்களை வாசித்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

https://m.facebook.com/story.php?story_fbid=2511523725614054&id=700424783390633

தீர்மானம் -1 📌

#வெளி_நாடுகளில்_தவிக்கும்_இந்தியர்களை_மீட்க_கோரி…

நம் நாட்டிற்கு அந்நிய வருவாயை தங்களின் உழைப்பால் ஈட்டிக் கொடுத்த தமிழக தொழிலாளர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகம் அழைத்து வர முழு வீச்சில் தீவிர முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாததை இச்செயற்குழு கண்டிக்கிறது.

தீர்மானம் -2 📌

#இணையவழி_போராட்டம்

தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ள வெளிநாடு வாழ் தமிழர்களை இலவசமாக அழைத்துவர மத்திய மாநில அரசுகள் பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 5, 6 ,7 ஆகிய மூன்று தினங்களில் பதாகை ஏந்தி இணையதளங்களில் பதிவிடும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் என்றும் இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -3 📌

#டாஸ்மாக்

கொரோனா நெருக்கடி காலத்தில் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மீண்டும் திறந்தது பெரும் அதிருப்தியை பொதுமக்களிடம் உருவாக்கியிருக்கிறது. தமிழக அரசு அடுத்த 6 மாதத்திற்குள் படிப்படியாக மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -4 📌

#வெளிநாட்டு_தமிழர்களின்_நலன்

வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரியை கொண்டு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் தாயகம் திரும்பும் தமிழக தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை அதன் மூலம் செயல்படுத்த வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -5 📌

#சிறைவாசிகள்

தமிழக சிறைகளில் வாழும் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத வழக்கு, பேதமின்றி விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தும் அதே நேரம், இந்த கொரோனா காலத்தில் வழிக்காவல் துணையின்றி அவர்களுக்கு 3 மாத கால பரோல் வழங்க வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-6 📌

#கொரோனா_நிவாரண_நிதி

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய மக்களுக்கு மத்திய அரசு இதுவரை நேரடியாக நிதிஉதவி எதையும் வழங்காதது நாடு முழுக்க அதிருப்தி அலைகளை உருவாக்கியிருக்கிறது. எனவே மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாயை 3 மாத கால நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -7 📌

#பிரதமர்_நிவாரண_நிதி

இதுவரை நடைமுறையில் இருந்த பிரதமர் நிவாரண நிதி திட்டத்திற்கு பதிலாக PM care fund இன்று புதிதாக ஒன்றை உருவாக்கி அதற்கு நிதியை கோருவது என்பது ஏற்க இயலாத ஒன்று. எனவே அனைத்து நிவாரண நிதியையும் முன்புபோல பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு இந்திய பிரதமரை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -8 📌

#கொரோனா_உயிரிழப்பு

இந்தியா முழுக்க கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5600 என்று அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது .இவர்கள் உட்பட உலகம் முழுக்க கொரோனாவால் உயிர் இழந்த அனைவரின் குடும்பத்திற்கும் இச்செயற்குழு ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்-9 📌

#விவசாயிகளின்_இலவச_மின்சாரம்

இலவச மின்சார திட்டம் தமிழகத்தின் விவசாய புரட்சிக்கு பெரும் ஆதாரமான ஒன்றாகும் இதை பறிக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் முயற்சியை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்விஷயத்தில் தமிழக அரசு சமரசம் செய்யக் கூடாது என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்-10 📌

#காவிரி

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு தனது நீராற்றல் துறையின் கீழ் கொண்டு வருவதை இச்செயற்குழு கண்டிப்பதுடன், உச்சநீதிமன்றம் வழங்கிய அதிகாரங்களுடன் அது தனித்தன்மையோடு செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -11 📌

#சீன_இந்திய_பதற்றம்

கடந்த ஒரு வாரமாக இந்திய- சீன எல்லையில் சீனாவின் அத்து மீறல்கள் நடந்து வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று இச்செயற்குழு இந்திய பிரதமரை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -12 📌

#அமெரிக்க_இனவாதம்

ஒரு கருப்பு இன சகோதரரை அமெரிக்க காவல்துறையினர் கொன்றதை கண்டித்து அங்கு நடைபெற்று வரும் போராட்டங்கள் அரச இனவாதத்தை தோலுரித்துக் காட்டுவதாக இருக்கிறது.

இந்நிலையில் வெள்ளை இன மக்களும், கருப்பின மக்களும் இணைந்து மனித உரிமைகளுக்காகவும், இன சமத்துவத்திற்காகவும் போராடுவதை அமெரிக்க அரசு மதிக்க வேண்டும் எனவும் ஜனநாயகப் பூர்வமாக இதை எதிர்கொள்ள வேண்டும் எனவும் இச்செயற்குழு அமெரிக்க அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்- 13 📌

#புயலால்_பாதித்த_மக்களுக்கு_ஆறுதல்

கடந்த மாதம் வீசிய உம்பன் புயலால் உயிரிழந்த மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

அதுபோல் நிசார் புயலால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ள மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மக்களுக்கும் செயற்குழு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதுடன், மத்திய அரசு இம் மாநிலங்கள் கேட்கும் பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக வழங்கிட வேண்டுமென என்றும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -14 📌

#ஊரடங்கு

மத்திய அரசின் திடீர் ஊரடங்கால், வழி தெரியாது மாநிலம் விட்டு மாநிலம் நடந்தே சென்ற தொழிலாளர்கள் துயரத்தில் இதயப்பூர்வமாக இச்செயற்குழு பங்கேற்கிறது.

சுதந்திர இந்தியா காணாத பேரழிவு இது என இதை சுட்டிக் காட்டுவதுடன், இந்த துயர பயணத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த ஆறுதலை இச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்-15 📌

#மாதத்_தவணை

தற்போது மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் வங்கிகளும் ,தனியார் நிதி நிறுவனங்களும் அடுத்த 5 மாதங்களுக்கு தவணை முறை கட்டணத்தை (Emi) வசூலிப்பதை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீரமானம்- 16 📌

#மின்சார_கட்டண_குளறுபடி

தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மின் நுகர்வு அளவுகளைக் குறித்து, அதற்கான கட்டணம் வசூலித்து வருகின்றது.

100 யூனிட்டுக்குக் கீழே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டண விலக்கு அளிக்கப்படுகின்றது. மின்சாரப் பயன்பாட்டை இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடும்போது, இரு மாதங்களுக்கான பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டு, அதை இரண்டால் வகுத்து, ஒவ்வொரு மாத பயன்பாட்டுக்காக வரையறுக்காமல், இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட மொத்த மின் அளவீட்டைக் கணக்கிடுகின்றனர்.

இதே போன்று 1000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அதை இரண்டு 500 யூனிட்டுகளாகப் பிரித்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.50 கட்டணம் வசூலிக்க வேண்டும்.

இதற்கு மாற்றாக மின் கட்டணம் வசூலிப்பதால் கூடுதலாக 20 சதவித மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் மின் பயனீட்டு கணக்கெடுப்பு நடக்காத நிலையில், கடந்த முறை செலுத்திய கட்டணத்தையே இந்த முறையும் செலுத்தலாம் என அறிவித்துள்ள நிலையில், இவ்விவகாரத்தை தமிழக அரசு கவனத்தில் எடுத்து மக்களின் நிதி சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்; 17 📌

#பழிவாங்கும்_நடவடிக்கைகளை_கைவிட_வேண்டும்

நாடு கொரோனா நோயில் சிக்கி அசாதாரண சூழ்நிலையில் இருக்க, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது .

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தேவன்கணா, கலீதா மற்றும் நடாஷா நார்வால் உள்ளிட்ட மாணவர்கள் கடந்த பத்து நாட்களில் வெவ்வேறு வழக்குகளில் மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜனநாயக வழி போராட்டங்களில் பங்கெடுத்த மாணவர்களின் மீது பொய் வழக்குகள் போடுவதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அதை திரும்ப பெற வேண்டும் என்றும் கோறுகிறது.

தீர்மானம் -18 📌

#இடஒதுக்கீடு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சமீபத்தில் மத்திய அரசு ‘ உயர் கல்வி சிறப்பு நிறுவனம் ‘ என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இதற்கு பின்னணியில் 69% இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கம் இருப்பதாக தெரிய வருவதால், 2017 சிறப்பு அந்தஸ்து ஒழுங்கு முறைப்படி மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே தமிழக அரசு அதனை ஏற்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் -19 📌

#பிற்படுத்தப்பட்டோர்_இட_ஒதுக்கீடு

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் கமிஷன் அறிவித்த 27% சதவீத இட ஒதுக்கீட்டை 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் -20 📌

# சுற்றுலா _விசாவில்_சென்றவர்களை_மீட்க..

சுற்றுலா விசாவில் மலேசியா சென்றவர்களை கள்ளக் குடியேறிகள் என தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி ,சிறைகளில் தள்ளி இருப்பது கண்டிக்கத்தக்கது .உடனடியாக இந்தியத் தூதரகம் இதில் தலையிட்டு அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது

மேற்கண்ட 20 தீர்மானங்கள் உடன் செயற்குழு நிறைவுற்றது.

இதில் zoom தொழில் நுட்பம் மூலம் பங்கேற்க வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்றனர்.

துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, கோவை சுல்தான் அமீர், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், ஆகியோரும் பங்கேற்றனர்.

மாநில துணைச் செயலாளர்கள் ஷமீம் அஹமத், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், துரை முகம்மது, நெய்வேலி இப்ராஹீம், சாகுல் ஹமீது, அப்சர் சையது மாநில அணிச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வெளிநாட்டு மண்டல செயலாளர்களும் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் என பலரும் இக்காணொளி செயற்குழுவில் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்.