ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல்… அமைச்சர் மா.சுப்ரமணியத்துடன் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி சந்திப்பு…

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பலரிடமும் பாராட்டு பெற்று சிறப்பாக செயல்பட்டு வருபவர் டாக்டர் ஜென்னத் MBBS அவர்கள்.

அவரை அப்பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் புவனேஷ்ராம் என்பவர், கடந்த மே 24 அன்று இரவு அவரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்துள்ளார்.

பெண் என்றும் பாராமல் தொந்தரவு செய்திருப்பதோடு, அவர் தனது பாரம்பர்ய விருப்பப்படி ஹிஜாப் எனும் தலைமுக்காடு அணிந்திருப்பதையும் விமர்சித்து கலகம் ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்டுள்ளார்.

இது தற்போது ஊடகங்கள் மூலம் பரபரப்பாகி உள்ளது. பலரும் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

களத்தில் மஜக உள்ளிட்ட கட்சிகளும், அமைப்புகளும் இது தொடர்பாக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து புகார் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் மருத்துவ சேவை மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் 48/2008-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து தாங்கள் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது பெண் மருத்துவர்களுக்கு எதிரான ஒன்று என்ற கோணத்திலும், மத வெறுப்பு என்ற கோணத்திலும் அணுக வேண்டிய விவகாரம் என்பதால் இதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை படித்த அமைச்சர் தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பொதுச்செயலாளரிடம் கூறினார்.

அடுத்து உடனடியாக உரிய துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் நடவடிக்கை கண் துடைப்பாக இருக்க கூடாது என்றார்.

தொடர்ந்து காவல் துறை தரப்பை தொடர்பு கொண்ட அமைச்சர், விரைந்து கைது நடவடிக்கை இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

உரிய நடவடிக்கைகள் முடிந்ததும் தகவல் தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பொதுச்செயலாளருடன், மாநில துணைச்செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப நுட்ப அணி செயலாளர் தாரிக் ஆகியோரும் உடனிருந்தனர்.