மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…

இது ஒன்றிய அரசின் உள்நோக்ககத்தை காட்டுகிறது….

#மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை…..

தமிழ்நாடு அரசு நடத்தி வரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் இச்செயல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு கருவிகள் சரியாகச் செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுவது நகைப்புக்குரியதாகும்.

வட இந்திய கல்லூரிகளில் நிலவும் மோசமான சீர்கேடுகளை சரி செய்ய வக்கற்றவர்கள், ஏதாவது குறை கூறி தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களின் கனவுகளை சிதைக்க துடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்திடும் நய வஞ்சக நோக்கமே இதில் நிறைந்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆணையத்தின் குற்றச்சாட்டுக்கு, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் உரிய விளக்கம் அளித்தும் கூட, அதை அவர்கள் ஏற்காதது நமது குற்றச்சாட்டுகளை நிருபிக்கிறது.

தமிழ்நாட்டின் மீது சிலருக்கு உள்ள தீராத கோபமும், தமிழர்களின் மீதான வெறுப்பு அரசியலும் இதில் கலந்துள்ளது..

வெற்றிகரமாக இயங்கி வரும் மருத்துவக் கல்லூரிகளின் மீது வஞ்சகம் காட்டுவது ”செங்கோல் அரசியல்” பேசுபவர்களின் ஆட்சி முறைக்கு அழகல்ல.

இதே போல் தமிழ் நிலத்தின் மற்றொரு அங்கமான புதுச்சேரியிலும், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் காமராஜர் மருத்துவக் கல்லூரிக்கு இடையூறு செய்திருக்கிறார்கள்.

சின்ன சின்ன குறைகளை கூறி அங்கு இவ்வாண்டு MBBS மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளார்கள்.

இவையாவும் டெல்லியில் உள்ள சிலரின் தென்னக வெறுப்பையும், சமூக நீதிக்கு எதிரான சதியையும் வெளிப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை தயக்கமின்றி எதிர் கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இவையாவும் விரைவில் நீட் தேர்வில் வென்று; இக்கல்லூரிகளில் இணையவுள்ள சுமார் 500 மருத்துவ மாணவர்களின் கனவுகளை நசுக்க கூடியது என்பதால், தமிழ்நாடு அரசு உரிய சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து இவ்விவகாரத்தை கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28. 05. 2023