பீஸ்ட் திரைப்படம் பதட்டத்தை தூண்டுகிறது… குவைத் MKP இஃப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்!

குவைத், ஏப் 15, குவைத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் இன்று இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மக்கள் எழுச்சியுடன் நடைப்பெற்றது.

குவைத் மண்டல MKP செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex, Mla அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

நிகழ்வு நடந்த டெஸ்மா டீச்சர் அரங்கிற்கு பெரும் திரளான தமிழக மக்கள் வருகை தந்திருந்தனர்.

அரங்கின் நுழைவாயிலுக்கு பிராமண சமூகத்தை சேர்ந்த நீதியரசர் ராஜேந்திர சச்சார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அது போல அரங்கத்திற்கு இந்தியாவின் சிற்பியும், உலகம் கவர்ந்த பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பெயரிடப்பட்டிருந்தது.

இது இவர்களை போன்ற பன்முக சிந்தனை மிக்க தலைவர்களைத்தான் உலகம் விரும்புகிறது என்பதை சொல்லாமல் சொல்வது போல இருந்தது!

அது போல இந்தியர்கள், தமிழர்கள் என அனைவருக்கும் வாழ்வளிக்கும் குவைத் அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் சமீபத்தில் மரணித்த மேதகு சேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அவர்களின் பெயர் மேடைக்கு சூட்டப்பட்டிருந்தது.

அரங்கில் மனிதநேய சொந்தங்கள் டி.ஷர்ட், பேட்ஜ் அணிந்து சுறுசுறுப்பாக இயங்கி மக்களை வரவேற்ற வண்ணமிருந்தனர்.

குவைத்தில் 22 கிளை அமைப்புகளுடன் MKP வலுவாக இயங்குவதோடு,தமிழக மக்களின் பேரன்பை பெற்றதாகவும் திகழ்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஒரு அம்சமாக அறிஞர் நிஜாமுதீன் அவர்கள் நடுநிலையோடு எழுதிய ‘ஸ்பெயினில் இஸ்லாம் ‘ என்ற நூலை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட, பிரபல திராவிட இயக்க செயல்பாட்டாளர் தோழர்.சித்தரஞ்சன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் TVS குழுமத்தின் தலைவரும், நிகழ்வின் முதன்மை ஆதரவாளருமான சகோ.ஹைதர் அலி அவர்கள் உரையாற்றினார்.

பிறகு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்ட அரங்கில் 450 நாற்காலிகள் நிரம்பி, அதே அளவு கூட்டம் நின்றபடி தொடர அரங்கம் திணறியது.

5.30 மணி அளவில் அதையும் தாண்டி வெளியே நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

இதுவரை MKP நடத்திய நிகழ்வுகளில் இவ்வளவு கூட்டம் வந்ததில்லை என ஏற்பாட்டு குழு கூறியது.

இது பற்றிய கருத்து கூறிய ஒரு சமூக ஆர்வலர், கடந்த சட்டமன்ற தேர்தலில் மஜக எடுத்த தியாகப்பூர்வ முடிவு மக்களிடம் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்று தந்திருப்பதாகவும், அதனால் தான் குவைத், துபை, கத்தார் நிகழ்வுகளில் முன்பை விட மக்கள் ஆதரவு திரண்டிருப்பதாகவும் கூறினார்.

உற்சாகம், எழுச்சிக்கு மத்தியில்
நிறைவாக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு..

புனித ரமலான் அமைதியை தருகிறது. பொறுமை, இறையச்சம், சகிப்புத்தன்மை, பசியை பொறுத்தல் , ஏழைகளுக்கு உதவுதல்,ஆகியவற்றை கற்று தருகிறது.

இந்த ஒரு மதிப்பு மிக்க சமுதாயத்தை உலகம் கண்ணியத்துடன் உற்று நோக்குகிறது.

இந்த மாதத்தில் நல்லிணக்கம் ஒங்குகிறது.

பல நாடுகளில் சிறைக் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுகிறார்கள். போர் நடக்கும் பகுதிகளில் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. அமைதி நிலைநாட்டப்படுகிறது.

முஸ்லிம்கள் அமைதி, சமாதானத்தை நேசிப்பவர்கள். குர்ஆன் இணக்கத்தை உருவாக்குபவரே சிறந்த மனிதர் என்கிறது

தொழுகையை விட சிறந்த அமல் சண்டையிடுபவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்வது என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.

இதை புரியாதவர்கள் இந்த சமூகத்தை காயப்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில் திரைப்படங்கள் வழியே சிலர் வெறுப்பை விதைக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்த முனைகிறார்கள்.

ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் இந்த தவறை செய்தார்கள்.

இப்போது விஜய் இந்த தவறை பீஸ்ட் படம் மூலம் செய்துள்ளார்.

ஏற்கனவே அவரது துப்பாக்கி படம் மூலம் ஏற்பட்ட பிரச்சனையை அவர் சந்தித்துள்ளார்.

இப்பிரச்சனையை நாம் எவ்வாறு கையாண்டோம் என்பது கலைப்புலி.தாணு அவர்களுக்கு தெரியும்.

இப்போது சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் பதட்டத்தை தூண்டுவதாகவும், அமைதியை குலைப்பதாகவும் இருக்கிறது. திரும்ப திரும்ப ஒரு சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறார்கள்.

இது ஒரு கலை அல்லது சினிமா என ஒதுக்கிட முடியாது. அது காலம் முழுக்க மக்களுடன் தொடர்புள்ள ஊடகம்.

எனவே இதில் தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு பதட்டத்தை தணிக்க உதவ வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.

முன்பு MGR, சிவாஜி படங்களில் சகோதரத்துவம் ஒங்கும் வகையில் காட்சிகள் இருக்கும்.

ரஜினிகாந்த் அவர்களின் படங்களிலும் அத்தகைய காட்சிகள் இருந்தது.

இப்போது சில நடிகர்கள் பணத்திற்காகவும், பரபரப்பான விளம்பரத்திற்காகவும் இப்படி ஒரு சமூகத்தை கேவலப்படுத்த நினைக்கிறார்கள்.

எந்த மதத்தையும், சாதியையும், இனத்தையும் இழிவுப்படுத்தி படம் எடுக்காதீர்கள்.

இயேசுவை இழிவுப் படுத்தினாலும், ராமரை இழிவுபடுத்தினாலும், பெரியாரை இழிவு படுத்தினாலும் நாங்கள் எதிர்ப்போம்.

உங்களால் பாபர் மசூதி இடிப்பை படமாக எடுக்க முடியுமா?

முள்ளிவாய்க்கால் பேரழிவை படமாக் எடுக்க முடியுமா?

2002 ல் நடந்த குஜராத் இனப்படுகொலைகளை படமாக எடுப்பீர்களா?

உண்மைகளை வைத்து படம் எடுங்கள். வாழ்வியலை, வரலாற்றை படமாக்குங்கள்.

கற்பனைகளில் மக்களை மூழ்கடிப்பதை, வரலாற்றை திரிப்பதை, ஒரு சமூகத்தை சீண்டுவதை நிறுத்துங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது ஆவேச உரை நேரலை செய்யப்பட்டதால் உலகம் எங்கும் பார்த்த தமிழ் மக்களிடம் அனலடித்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் இஃப்தார் விருந்து நடைப்பெற்றது.

கூட்டம் கடைசி நேரத்தில் இன்னும் திண்டதால் , ஒரே இடத்தில் திட்டமிடப்பட்டிருந்த இஃப்தார் விருந்து 4 இடங்களில் நடத்த வேண்டியதாயிற்று.

மனிதநேய சொந்தங்கள் கூடுதல் உணவுகளை வரவழைத்து நிலைமையை சமாளித்தனர்.

இந்நிகழ்வில் காணப்பட்ட மக்கள் எழுச்சி மூலம் MKP குவைத்தில் செல்வாக்கு மிக்க சேவை அமைப்பு என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 7 ஆண்டுகளில் MK P நடத்திய ஏழாவது பெரிய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் முஸ்லிம்களுடன் திரளான இந்துக்கள், கிரித்தவர்கள், தலித்துகள், திராவிட வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் என சகலரும் வருகை தந்திருந்தனர்.

அனைத்து தமிழக கட்சிகள், அமைப்புகளின் வெளிநாட்டு பிரிவுகளின் நிர்வாகிகளும் வருகை தந்திருந்தனர்.

பெரும்பாலான வருகையாளர்களை பொதுச் செயலாளர் அவர் நேரம் ஒதுக்கி சந்தித்ததோடு, அவர்கள் தற்படம் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது பலராலும் பாராட்டப் பெற்றது.

தகவல்,
#தகவல_தொழில்நுட்ப_அணி
#mkpitwing
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#குவைத்_மண்டலம்

15.04.2022