நுபுர் சர்மா விவகாரம்… உச்ச நீதிமன்ற கருத்து ஆறுதல் அளிக்கிறது…

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

பாஜக பிரமுகர் நுபுர் சர்மா தொடர்புடைய வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து நாட்டையே உலுக்கி இருக்கிறது.

உலகம் எங்கும் போற்றப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி பேசிய அவரது கருத்து, உலக அளவில் கண்டனத்திற்குள்ளான நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கிலும் எதிரொலித்து வருகிறது. அது சார்ந்த போராட்டங்களும் நீடித்து வருகிறது.

இதனிடையே ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அவரை பாதுகாத்து வருவதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், அவரது கருத்தை ஆதரித்து பதிவிடும் போக்கும் அதிகரித்திருக்கிறது.

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக யார், எதை பேசினாலும், அவர்களை பாதுகாக்க அதிகார மையம் இருக்கிறது என்ற துணிச்சல்தான் இதற்கு காரணமாகும்.

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் நுபுர் சர்மாவை கடும் வார்த்தைகளால் கண்டித்திருக்கிறது.

ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? என்றும் நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கி விட்டார் என்றும், அதன் விளைவே உதய்பூர் படுகொலை சம்பவம் என்றும், தனது சர்ச்சை பேச்சுக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் தோன்றி அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

இது அவருக்கு மட்டும் விடுத்துள்ள நீதித்துறையின் கண்டனமாக பார்க்க கூடாது.

அவரை பாதுகாப்பவர்கள், அவரது கருத்தை வழிமொழிபவர்கள், மத வெறியை தூண்டுபவர்கள், ஃபாஸிஸ்ட்டுகள் என அனைவருக்குமானதாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

உலகம் எங்கும் இந்திய திருநாட்டின் நற்பெயருக்கும், இந்திய பொது சமூகத்தின் கண்ணியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாகும்.

இதன் மூலம் இது போன்ற பொறுப்பற்றவர்கள் மேலும் மேலும் பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் தூண்டாமல் இருக்க முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதே அதன் நோக்கமாகும்..

கடும் சட்ட நடவடிக்கைகள் தவறும் போது, தனிநபர்களின் அராஜகங்கள் பெருகிவிடும் ஆபத்துகள் உருவாகிவிடும் அபாயம் இருக்கிறது.

நாட்டில் இணக்கமான பாரம்பரிய சமூக அமைப்பு பாழ்பட இனியும் அனுமதிக்கக் கூடாது.

இது தொடர்பில், உச்ச நீதிமன்றம் கூறிய இன்றைய கருத்துகள் அமைதியையும், ஒற்றுமையையும் விரும்பும் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கிறது.

மேலும் மக்களை இணைக்கும் பல சமூக கடமைகள் குறித்தும் நல்லெண்ணத்தோடு அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

முக்கியமாக, அனைத்து மதவெறி சக்திகளுக்கும் எதிராக மக்களை சித்தாந்த ரீதியாக கட்டியெழுப்பும் தார்மீக கடமையை, அனைத்து ஜனநாயக சக்திகளும், அரசியலை கடந்து முன்னெடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இத்தருணத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் முன் வைக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

1.07.2022