ஒரு வரலாறு உருவாகிறது.! மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி கடிதம்

#பேரன்புக்குரிய_மனிதநேய_சொந்தங்களே ..
#ஏக_இறைவனின்_அமைதியும் , #சமாதானமும்_உரித்தாகுக !

உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது .

கடுமையான மன அழுத்தங்கள் , ஓய்வற்ற பயணங்கள் , இடைவிடாத அலைப்பேசி அழைப்புகள் , தொடர்ந்து நிகழும் மக்கள் சந்திப்புகள் என தினமும் இயங்க வேண்டியிருக்கிறது .

அவற்றுக்கு மத்தியில் தான் ஒரு நள்ளிரவில் இம்மடலை வரைகிறேன் . உங்களோடு பேசும்போதும் , உங்களுக்காக உழைக்கும் போதும் , உங்களுக்காக எழுதும் போதும் மனமும் ,உடலும் சோர்விலிருந்து விடுபட்டு சிறகு முளைத்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறது என்பதே உண்மை .

#சொந்தங்களே…!

கடந்த அக்டோபர் 6 – 2015 தொடங்கி நாம் நடத்தி வந்த உட்கட்சி ஜனநாயகத்திற்கான போராட்டம் கடந்த பிப்ரவரி 25 – 2016 அன்றுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது .

எத்தனையோ உண்மைகளும் , நியாயங்களும் புதைக்கப்படலாம் . ஆனால் நியாய தீர்ப்பு நாளில் இறைவனுக்கு முன்னால் அவற்றை நாம் முன்னிறுத்துவோம் . இந்த 4½ மாதங்களில் வன்முறைகள் , அவதூறுகள் , அராஜகங்கள் ஆகியவற்றை துணிச்சலோடு எதிர்கொண்டோம் . நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தோம் . இப்போது புதிய பாதை ; புதிய பயணம் என்ற முழக்கத்தோடு புறப்பட்டிருக்கிறோம் .

இறையருளால் கடந்த பிப்ரவரி 28 – 2016 அன்று நாம் மனிதநேய ஜனநாயக கட்சியை கும்பகோணத்தில் தொடங்கி , அன்று இரவே அய்யம்பேட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து சிறுத்தையின் வேகத்தோடு பயணத்தை தொடங்கிவிட்டோம் .

கொந்தளிப்பான கடல்தான் மிகச்சிறந்த மாலுமிகளை உருவாக்கும் . அடக்குமுறைகளில்தான் புரட்சிகள் உருவாகும் .

ஆம் ! நாம் சந்தித்த நெருக்கடிகள் தான் இன்று புதிய பாதையில் புதிய பயணத்தை திசைக்காட்டியிருக்கிறது .

#சொந்தங்களே…!

தார்குச்சிகளால் நீல வானத்தை கிழித்துவிட முடியாது . உமிழ் நீரால் எரிமலையை அணைத்துவிட முடியாது . அதுபோலவே துரோகங்களாலும் , அவதூறுகளாலும் நம்மை அழித்துவிட முடியாது என்பதை இறையருளால் நிரூபித்திருக்கிறோம் .

இதோ … ஊரெங்கும் பேரெழுச்சியை பார்க்கிறோம் . கருப்பு , வெள்ளை , மற்றும் கருஞ்சிவப்பில் நட்சத்திரம் பொறித்த நம் கொடியை ஊர்வலமாய் முன்னெடுத்துச் செல்லும் ஜனநாயகப் போராளிகளின் தீரச்செயல்களை மெய்சிலிர்ப்போடு பார்க்கிறோம் .!

ஒரு வசந்தத்தின் இடி முழக்கமாய் ; மாபெரும் மறுமலர்ச்சியின் முன்னோட்டமாய் ; மஜகவின் பயணத்தை மக்கள் வரவேற்கிறார்கள் .

கட்சியின் பெயரும் , கொடியும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டு எழுச்சிமிகு அய்யம்பேட்டை பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டதும் நமது சொந்தங்கள் 24 மணி நேரத்தில் சமூக இணையதளங்கள் வழியாக அதை உலகமெங்கும் கொண்டு சேர்த்த சாதனை அளப்பரியதாகும் .

அடுத்த நாளே மோட்டார் பைக்குகளில் ஸ்டிக்கர் கொடிகள் ஒட்டப்பட்டன . கார்களில் கொடிகள் பறந்தது . கம்பங்களில் கொடிகள் ஏறின . போர் வீரர்களைப் போல மனிதநேய சொந்தங்கள் கொடியை அறிமுகப்படுத்திய வேகம் இதுவரை தமிழகம் கண்டிராத சான்றாகும் .

ஒரு நாடு விடுதலையடைந்தால் , அம்மக்கள் எப்படி கொண்டாடுவார்களோ ; குதூகலிப்பார்களோ ; அதுபோல நமது கொடியை ஏற்றிப் போற்றினார்கள் என்றால் அது மிகையாகாது .

நமது கட்சியை நோக்கி அலை , அலையாய் திரண்டு வரும் மாணவர்களையும் , இளைஞர்களையும் மட்டுமல்ல எக்கட்சியை சாராத பொதுமக்களும் , புதியவர்களும் பெரும் நம்பிக்கையோடு இணைவதையும் யாராலும் தடுக்க முடியவில்லை .

ஈர்ப்புமிக்க துடிப்பான தலைமை தங்களுக்கு கிடைத்திருப்பதாக அவர்கள் கருதி ஓடிவருகிறார்கள் . பாலைவனத்தில் நிழல்தேடி அலைந்த பயணிகளைப் போல, நம்மை தேடி வருகிறார்கள் .

நமக்கு பெரும் ஆச்சர்யம் என்னவெனில் , 15 வயது சிறியவர்களிடம் கூட நமது கட்சி ஏற்படுத்தியிருக்கும் அரசியல் தாக்கமாகும் . அவர்களெல்லாம் நமக்கு ’வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பும் செய்திகளும் , நம்மோடு உரையாட வேண்டும் ; புகைப்படம் எடுக்க வேண்டும் என்று காட்டும் ஆர்வமும் நமக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது .

15 முதல் 35 வயதுக்குட்பட்ட மாணவர்களிடமும் , இளைஞர்களிடமும் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையை சரியான முறையில் வழி நடத்திட வேண்டும் என்ற பொறுப்புணர்வு அதிகமாகியிருக்கிறது . மிகப்பெரும் மனிதவளம் நம் கட்சிக்கு கிடைத்திருக்கிறது . அவர்களது ஆற்றலையும் , ஆர்வத்தையும் சரியான வழியில் பயன்படுத்தி மக்கள் பணியாற்ற வேண்டும் .

#சொந்தங்களே …!

இளைய தலைமுறையை வெற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறமெனில் , சமுதாய பெரியவர்களிடமும் ஜமாத்துகளிடமும் நமக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் அளவிட முடியாதது . நிறைய இமாம்கள் நம்மை தொடர்புக் கொண்டு வாழ்த்துகிறார்கள். நல்ல ஆலோசனைகளை வழங்குகிறார்கள் .

சமூக இணைய தளங்களில் நமது ஜனநாயக போராளிகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் விளைவாக முஸ்லிம்களின் வட்டம் என்பதை தாண்டி பிற சமுதாய இளைஞர்களும் நமது கட்சியில் இணைகிறார்கள் என்பது தான் உச்சகட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது . ஆம் பெரும்பான்மையினரும் , சிறுபான்மையினரும் கைக்குலுக்கி சேவையாற்றும் சமூக நல்லிணக்கத்தின் களமாக நமது கட்சி மாறியிருக்கிறது . இதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது .

#சொந்தங்களே…!

நமது கட்சிக்கு ஜமாத்தார்கள் , ஆலிம்கள் தரும் ஆதரவும் , அரசியல் சாராத இயக்கங்கள் தரும் ஆதரவும் புதிய உற்சாகத்தை தருகிறது .

அதுபோல முஸ்லிம்கள் அல்லாத பிற சமுதாய மக்களும் நமது கட்சியில் பேரார்வத்துடன் இணைவதை பலரும் பாராட்டி மகிழ்கிறார்கள் .

‘நல்ல அரசியலை ; நாகரீகமான அணுகுமுறையை’ புரிந்து கொண்டு எல்லா மக்களும் நம்மை நோக்கி திரள்கிறார்கள் எனில் நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு பணியாற்ற கடமைப்பட்டிருக்கிறோம் .

முஸ்லிம்களால் தலைமையேற்று நடத்தப்படும் அனைவருக்குமான கட்சியாக மஜகவை வழி நடத்துவதில் தான் நமது வெற்றிகரமான அரசியல் பயணம் அடங்கியிருக்கிறது . முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் , பொதுப் பிரச்சனைகளையும் சம அளவிலே கையாண்டு சமூக நீதியையும் , நேர்மையான அரசியலையும் செயல்படுத்திட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது .

நமது நாட்டில் முஸ்லிம்களின் அரசியல் என்பது பரந்து விரிந்த பார்வையோடும் , பக்குவமான அணுகுமுறையோடும் அமைய வேண்டும் . அதில் நாம் உறுதியாக இருக்கிறோம் .

#சொந்தங்களே…!

கட்சி தொடங்கிய 26 நாட்களில் மாநாடு நடத்துவது என்று அறிவிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் . இறையருளால் அந்த துணிச்சல் நமக்கு இருக்கிறது .

‘இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்’ என்பது போல களத்தில் நமது சொந்தங்கள் மாநாட்டுப் பணிகளுக்காக இரவு – பகலாக உழைக்க தொடங்கிவிட்டார்கள் .

நிதியில்லாமல் தலைமை தடுமாறுவதை அறிந்து , மாவட்டம் தோறும் நன்கொடைகளை திரட்டும் அதிமுக்கியப் பணியையும் முடுக்கி விட்டிருக்கிறார்கள் . நிதிதானே மாநாட்டின் முக்கிய அடித்தளமாக இருக்கிறது !

நமது மனிதநேய சொந்தங்கள் , தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு மக்களை திரட்டும் பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் . ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 , 200 என வேன்களும் , பேருந்துகளும் முன்பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன .

சுவர் விளம்பரங்கள் எழுதவும் , பேனர்கள் வைக்கவும் , போஸ்டர்கள் ஒட்டவும் தேர்தல் கால விதிமுறைகள் தடுத்த நிலையிலும் , ஒவ்வொரு தொண்டரும் விளம்பர முகவர்களாக மாறிவிட்டார்கள் .

#சொந்தங்களே…!

ஓடும் புலியின் வேகத்தை கூலாங்கற்களால் தடுத்திட முடியுமா ? காட்டாற்று வெள்ளத்தை கரைப்போட்டுத் தடுக்க களிமண்ணால் முடியுமா ? புயல் காற்றை தடுத்திட விஞ்ஞானத்தில் வழியுண்டா ?

அதுபோல் தான் இடையூறுகளும் , தடைகளும் நம் படைவீரர்களை தடுத்திட முடியாது . பணிகளை முடக்கிட முடியாது ! இவர்கள் உடலில் ஓடுவது ரத்தமா ? எரிபொருளா ? என எல்லோரும் வியக்கும் வகையில் நம் மனிதநேய சொந்தங்கள் புறப்பட்டிருக்கிறார்கள் .

#எல்லா_புகழும்_இறைவனுக்கே .!

மார்ச் 26 , அன்று தலைநகர் சென்னையில் குடும்பத்தோடு கூடுவோம் ! புதிய பயணத்தில் புதிய வரலாற்றை தொடங்குவோம் .! வாரீர் .!

#பணிந்தவன்_வென்றதில்லை ..!
#துணிந்தவன்_தோற்றதில்லை ..!

அன்புடன்
M.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக
16_03_16