மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ரமலான் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி!!
உலகின் மற்றுமொரு திருநாளாக ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் மலர்ந்திருக்கிறது.
உலகப் பொதுமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் மாதத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டாக 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் நிறைவாக உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இப் பெருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
பசியின் கொடுமையை உணரும் வகையிலும்;பிறர் பசியை போக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை பெறும் வகையிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் இறை வழிபாட்டோடு நகரும் இந்த நாட்கள் உணர்வுபூர்வமானவை!
நிறைவாக பெருநாளை கொண்டாடி மகிழ வான்பிறையை எதிர்நோக்கும் நிமிடங்கள் அழகானவை!
ஆனால் அந்த உற்சாகத்தை வழக்கம் போல கொண்டாட முடியாத சூழலில் நாம் இருக்கி
றோம்.
கொரணா பெருந்தொற்றின் காரணமாக குடும்பத்தினரோடும், பல் சமூக நண்பர்களோடும் இப்பெருநாளை கொண்டாடி மகிழும் நிலையில் தற்போதைய சூழல் இல்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும்.
சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் பரவுகின்ற நிலையில்; அவரவர் இல்லங்களிலேயே தொழுது விட்டு மகிழ்ச்சியினை கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எனவே இல்லங்களில் இறைவனை தொழுது, நமது தாய் நாட்டில் கொரோனா தொற்றால் அவதிப்படும் நோயாளிகள் நலம் பெறவும், இத்தொற்று நோயிலிருந்து நாடு விரைந்து பாதுகாக்கப்படவும், இந்த அரிய பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்கள் உட்பட அனைவரும் ஆரோக்கியத்துடன் செயலாற்றவும் மனம் உருகிப் பிரார்த்திப்போம்.
கொரோனா தொற்று முற்றிலும் ஒழிந்து; உலக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு விரைந்து திரும்பட்டும் என்ற பிரார்த்தனையோடு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ரமலான் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவன்,
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
13.05.2021