பின்தங்கிய மக்களின் இதய துடிப்பாய் இயங்கியவர் ராம்விலாஸ் பாஸ்வான்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!


லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தோம்.

ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்களின் சோஷலிஸ முழக்கங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மாணவர் அரசியலில் களப்பணியை தொடங்கினார்.

தலித்துகள் உள்ளிட்ட பின்தங்கிய மக்களின் நலன் சார்ந்த அரசியலை வலிமைப்படுத்திய அவர், சமூகநீதி காவலர் திரு.V.P.சிங் அவர்கள் ஏற்படுத்திய தேசிய அரசியல் எழுச்சியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அது VP.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா,முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், சரத்யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் இணைந்திருந்த ஜனதா தளத்தின் வசந்த கால நாட்களாகும்.

தேசிய முன்னணி வெற்றி பெற்று, திரு V.P சிங் அவர்கள் பிரதமர் ஆனதும், அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பிறகு பீஹார் அரசியலையும் கடந்து நாடு தழுவிய அளவில் தன் அரசியலை விரிவுப்படுத்தினார்.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என அவரது அரசியல் பயணம் தொடர்ந்தது.

வாஜ்பாய் ஆட்சியில் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது, குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைப்பெற்ற கலவரங்களை கண்டித்து, அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

அவரது கூட்டணி தொடர்பான அரசியல் அணுகுமுறைகள் மீது விமர்சனங்கள் உண்டு. அவரது பாஜகவுடனான அரசியல் தோழமை அவரது பொது வாழ்வில் குறைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது.

ஆயினும் அவர் பின்தங்கிய மக்களின் நலன்களுக்கு குரல் கொடுத்தவர் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை.

அவர் மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சராக இருந்த போது, தமிழகத்திற்கு வழங்கிய திட்டங்களை மறக்க முடியாது.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், லோக் ஜனசக்தி கட்சியினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
09.10.2020