நூல்களை வாசிக்கும் சமூகத்தை உருவாக்கிட வேண்டும்..! தோப்புத்துறை நூலக திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!!

வேதை.செப்.09., தோப்புத்துறையில் தொழில் அதிபர் சுல்தான் ஆரிப் அவர்களின் ஒத்துழைப்போடு ,துபை சங்கம் சர்பில் புதிய நூலகம் ஒன்று திறக்கப்பட்டது.

அதில் பேசிய சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் , முஸ்லிம் சமூகம் வழங்கிய அறிவு கொடைகளை வரலாற்று ரீதியாக எடுத்து வைத்து உரையாற்றினார். தமிமுன் அன்சாரி MLA அவர்களை இளம் தலைவர் என்றும், அறிவாளி என்றும் பாராட்டியவர் அவருக்கும், தனக்கும் 20 ஆண்டு கால நட்பு இருப்பதை சுட்டிக்காட்டி, தோப்புத்துறையின் வரலாற்று சிறப்புகளையும் பட்டியலிட்டார்.

அடுத்துப் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு…

நூல்கள் அறிவை விசாலமாக்குகின்றன. ஒரு நாட்டில் புரட்சியை உருவாக்க வேண்டுமானால் அங்கு முதலில் ஆயுதங்களை அல்ல, புத்தகங்களையே இறக்குமதி செய்ய வேண்டும். துப்பாக்கியை விட வலிமையானவை நூல்கள்.

நான் இதுவரை படிக்காத ஒரு நூலை எனக்கு தருபவர் தான் , எனது விருப்பத்திற்கு உரியவர் என்றார் அபிரகாம் லிங்கன்.

நூலகங்கள் இல்லாத ஊர்கள் ஊரே அல்ல என்றார் லெனின்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், தனக்கு அறுவை கிசிச்சை செய்யப்படுவதற்கு முன்பாக ,ஒரு நாள் அதை தள்ளிப் போட முடியுமா? என மருத்துவர்களிடம் கேட்டார். அவர்கள் ஏன் ?என்றார்கள். நான் ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதை முடித்து விடுகிறேன் என்றார் அண்ணா.

அவர் புத்தகம் வாசிப்பதற்காகவே ரயில்களில் அதிகமாக பயணம் செய்தார்.

தூக்கு மேடைக்கு அழைக்க காவலர்கள் சிறையறைக்கு வந்தப்போது, “கொஞ்சம் இருங்கள்.. நான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை முடித்து விடுகிறேன் “என்றார் தீரன் பகத்சிங்.

ஒரு ஹஜ் பெருநாள் அன்று ,அதிகாலையில், சதாம் உசேனை தூக்கு கயிற்றில் ஏற்ற அதிகாரிகள் வந்தனர். அவரிடம் திடிரென அச்செய்தியை கூறினர்.

சதாம், பதட்டமடையாமல், நான் இப்போது குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் இருங்கள் . வருகிறேன் என்று கூறினார்.

வாசிப்பின் சுகத்தை அறிந்தவர்களுக்கு புத்தகங்கள் தான் நல்ல நண்பர்கள் என்பது தெரியும்.

எனவே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். நூல்கள் வாசிக்கும் அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும்.

தோப்புத்துறை என்பது மத நல்லிணக்கத்திற்கு பேர் போன ஊர். எனவே தான் இந்த நூலகத்தில் குர்ஆன், பகவத் கீதை, பைபிள், திருக்குறள் என எல்லாம் இருக்கிறது

மத நூல்கள், மத மறுப்பு நூல்கள், அறிவியல் நூல்கள், இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள் என எல்லா வற்றையும் வாசிக்க வேண்டும். வாசிப்புக்கு வரையறை இல்லை. வாசிக்கவும், யோசிக்கவும் புத்தகங்கள் துணை நிற்கின்றன.

தோப்புத்துறையில் இந்நூலகம் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். தோப்புத்துறையின் வரலாற்று சிறப்புகளில் இதுவும் ஒன்றாக மாற வேண்டும்.

முற்காலத்தில் தோப்புத்துறையில், காசித் தெருவில் சர்வதேச நாணய மாற்று வணிகம் சிறப்பாக நடைப்பெற்று வந்தது.

ராஜேந்திர சோழனின் கடற்படை கப்பலுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தோப்புத்துறையில் தான் இருந்தது.

பிற ஊர்களுக்கு முன் மாதிரியாக,அந்த காலத்திலிருந்தே தோப்புத்துறையில் பள்ளிவாசல்களின் பெண்கள் தொழுக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு இன்றளவும் அது தொடர்கிறது .

அப்படிப்பட்ட சிறப்புகள் இவ்வூருக்கு உண்டு.

இங்கு தொடங்கப்பட்ட நூலகத்தை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த வேண்டும். வீண் பேச்சுகளை பேசுமிடமாக அது மாறிவிடக் கூடாது.

ஊரில் ஒரு நூலகம் தொடங்க, MSF தீர்மானம் நிறைவேற்றியது. அதை துபை சங்கம் நிறைவேற்றி காட்டி விட்டது. இப்பணியில் ஈடுபட்ட துபை சங்க நிர்வாகிகளுக்கும், நிதியுதவி செய்த ஆரிபா அண்ணனுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். தனது பேச்சில் தானும், CMN சலிமும், ஹாஜாகனியும், ஆளூர் .ஷாநவாசும் ஒரே அறையில் உண்டு, உறங்கியவர்கள் என்றும், தனது அறிவாலும், உழைப்பாலும், வரலாற்று ஆய்வாலும், கல்வி பணிகளாலும் அவர் உயர்ந்து நிற்கிறார் என சலீம் அவர்களை பாராட்டினார்.

இந்நிகழ்வில் ஆரிபா குழும தலைவர் சுல்தானுல் ஆரிபின், தலைமை இமாம் சாகுல்ஹமீது ஹஜ்ரத், ஜமாத் தலைவர் நவாஸ்தீன், துபை சங்க தலைவர் சஹாபுதீன், டாக்டர் அலி அக்பர், பைத்துல் மால் தலைவர் ஜஹாங்கீர், முஹமதியா அறக்கட்டளை தலைவர் முகம்மது அலி, முன்னாள் ஜமாத் தலைவர்கள் z. கமாலுதீன், ஜபருல்லாஹ் ,துபை சங்க நிர்வாகி ஜமால் மெய்தீன், புயல்குமார், இந்து இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த வை.சுப்ரமணியன், நாகூரார் , துபை சங்கத்தை சேர்ந்த சாந்தா மைதீன், அவுலியா, முஜீப், JP முஜீப், ஹம்தான்,உட்பட ஆண்கள், பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது.சேத்தான் அவர்களின் கவிதை குரலோசையுடன் கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
10.09.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*