பொது சிவில் சட்டத்தை எதிர்த்து தலைநகர் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…

image

image

தமிழ்நாடு பள்ளிவாசல் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், அடையாறு பள்ளி தலைவர் சதுதீன் பாகவி, மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தொல். திருமாவளவன், முஸ்லீம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP, ஹாரூண் Ex.MP, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

வர்தா புயலால் இந்த போராட்டம் நடக்குமா? என நினைத்தோம். இறைவனின் நாட்டத்தால் இது நடக்கிறது. புயல் பேருந்துகளை புரட்டிப் போடலாம். நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எரியலாம். அது நமது ஈமானை புரட்டிப் போட முடியாது.

அதனால்தான் இவ்வளவு நெருக்கடியிலும் கூட்டம் திரண்டுள்ளது. 3 நாட்களாக மொபைல் போன்கள் வேலை செய்யவில்லை. யாரும் யாரையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை. வாகனங்கள் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஷரியத்திற்காக மக்கள் திரண்டு இருக்கிறார்கள். இது போன்ற எழுச்சிதான் மோடியின் அரசியலுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

மோடியால் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரமுடியாது. RSSன் வழிகாட்டி கோல்வால்கர் 1972 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ‘பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரமுடியாது; அது இந்தியாவுக்கு சாத்தியமில்லை’ என்றார். இது மோடிக்கு தெரியவில்லை. அவர் குருவை மிஞ்சிய சிஷ்யராக செயல்படுகிறார்.

தமிழகத்தில் உள்ள இந்து திருமண சீர்திருத்த சட்டம் அண்டை மாநில இந்து சகோதரர்களுக்கு பொருந்தாது. கோவா இந்துகளுக்கு தனிச்சட்டம் உள்ளது. வடகிழக்கு மாநில பழங்குடியினருக்கு பலதார மணத்திற்கு அனுமதி உள்ளது. மணிப்பூர் கிருத்தவர்களுக்கு தனி திருமண சட்டம் உள்ளது. கத்தோலிக்க கிறித்தவர்கள் திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற முடியும். புரோட்டஸ்டண்டு கிறித்தவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே விவாகரத்து பெற முடியும். சீக்கியர்களுக்கு ராணுவத்திலும், காவல்துறையிலும் தலைப்பாகையும், தாடியும் வைத்துக் கொள்ள சிறப்பு சட்டம் அனுமதிக்கிறது. இதுதான் இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது சிறப்பு. இதை கலைக்கக் கூடாது. ஒவ்வொரு மதத்தினரின் சிறப்பு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்து மக்கள் நல்லவர்கள். அவர்கள் அனைவரையும் மதிக்கிறார்கள். நாம் அவர்களோடு இணைந்து தான் உரிமைகளுக்காக போராட வேண்டும். தனிமைப்பட்டு விடக்கூடாது. மதவெறியர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்புகளுக்கும், செயல்வீரர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு துன்பம் நேரும்போதெல்லாம் முஸ்லிம்கள் தான் முதலில் சேவையாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது. அதை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்.

நீங்கள் போராட்டத்தை முடித்துவிட்டு, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அமைதியாக திரும்புங்கள். உங்கள் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களையும், உதவிப் பொருட்களையும் வாரி வழங்குங்கள். அன்பால் எல்லோரையும் வென்றெடுங்கள். ஒரு முஸ்லிமின் பண்பு அது. அதுதான் வெறுப்பை வீழ்த்தி, இணக்கத்தை உருவாக்கும்.

இவ்வாறு, மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார்.

தகவல்;
மஜக ஊடகப்பிரிவு,
சென்னை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.