மஹாதீருக்கு வாழ்த்துக்கள்..! மலேசியாவை காப்போம் என சூளுரைத்தார்! வெற்றிக் கண்டார்!

(மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியீடும் வாழ்த்துச் செய்தி..!)

‌ஆசியாவின் தொட்டிலாக கொண்டாடப்படும் நாடு மலேசியா. நேற்று அங்கே நடைப்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியீடப்பட்டிருக்கிறது.

‌கடந்த 60 ஆண்டு காலமாக அந்த நாட்டை தேசிய முன்னணி என்ற மூன்று இனங்களை பிரதிபலிக்கும் ‘பாரிசான் நேஷ்னல்’ ஆண்டு வந்தது .அதில் அவர் 70 சதவீத மக்கள் தொகையை கொண்ட பூர்வீக இனமான மலாய் மக்களை கொண்ட அம்னோ கட்சி பிரதானமாக இருந்தது.

‌ 60 ஆண்டு கால தொடர் ஆட்சியில் நஜீப் துன் ரசாக் ஆண்ட போது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தது, அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் ‌பிலிப்பைன்ஸ் ‘இமல்டா’ வுடன் ஒப்பிடப்பட்டார். மனைவியின் ஊழலால் அவர் பெயர் கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வெளிநாடு ஒன்றில் இருந்து அவர் பெற்றதாக கூறப்படும் நன்கொடை பெரும் ஊழலாக விவாதிக்கப் பட்டது.

‌இந்நிலையில் தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை அப்துல்லா படாவி கையில் ஒப்படைத்த மஹாதீர், மீண்டும் தனது 92 வயதில் களத்துக்கு வந்தார்.

கடும் விமர்சனங்களை அரசுக்கு எதிராக கூறினார். இதனால்‌ அம்னோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் புதிய கட்சியை தொடங்கினார்.

‌ அவரால் பழிவாங்கப்பட்ட அன்வர் இப்ராஹிமோடு கை கோர்த்தார்,தான் கடுமையாக மோதிய சீனர்களை அரவணைத்தார்.

இந்திய சமூகம் குறிப்பாக 2 லட்சம் பேரை கொண்ட இந்திய முஸ்லிம்கள் அவரை ஆதரித்தனர். சீக்கியர்களும், இந்துக்களின் கணிசமான ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

‌”மலேசியாவை காப்போம்” என்ற அவரது முழக்கம் மலேசியாவை அதிர வைத்தது. 92 வயதில் அவர் செய்த பிரச்சாரம் ஆச்சரியமாக பேசப்பட்டது.

அவரது நடை, உடை, பாவனை ரசிக்கப்பட்டது. கடந்த கால சாதனைகள் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. ஒரு தனி நபர் ஆளுமையின் தாக்கம் எவ்வளவு வீரியமானது என்பது உணர்த்தப்பட்டது, “ஆம்! அவர் உருவாக்கப்பட்ட தலைவர் அல்ல, பிறவி தலைவர்! ”

‌ அவரது சீரிய தலைமையின் கீழ் அவரது ‘நம்பிக்கை கூட்டணி’ 122 இடங்களை பெரும்பான்மையாக பெற்றது, 60 ஆண்டுகளாக தொடர்ந்த அம்னோ முன்னணி தலைமையிலான தேசியஆட்சியை வீழ்த்தினார்.

‌ ஊழல், GST அமல்படுத்தியதில் கோளாறு, பெட்ரோல் விலையேற்றம், மோசமான விலைவாசி உயர்வு, சுங்கவரி, கல்வி முறையில் முன்னேற்றமில்லாதது ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் #மஹாதீரை நம்பியுள்ளார்கள்.

வசீகர பேச்சாளரும், சிறந்த செயல்பாட்டாளருமான அன்வருக்கு கூட , முந்தைய பொது தேர்தலில் இவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை. மக்கள் இவருக்கு அந்த ஆதரவை கொடுத்துள்ளனர்.

‌அதே நேரம் மலேசியாவின் தேர்தல் முடிவுகள் நுட்பமான பல கவலைகளை உருவாக்கியுள்ளது.

‌ ‘நம்பிக்கை கூட்டணியில்’ மஹாதீரின் புதிய கட்சி 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அன்வர் இப்ராஹிம் கட்சி 47 இடங்களை பெற்றுள்ளது,ஆனால் சீன இனவாதம் பேசக்கூடிய DAP கட்சி 42 இடங்களை பெற்றுள்ளது, மலேசியா பூர்வகுடிகளை கவலை கொள்ள செய்திருக்கிறது.

அதே சமயம் ஆட்சியை இழந்த ‘அம்னோ’ கூட்டணி 79 இடங்களை தக்க வைத்துள்ளதையும், தனியாக நின்று ‘பாஸ்’ கட்சி 18 இடங்களை தக்க வைத்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

இந்த வெற்றி என்பது மஹாதீர் என்னும் அரசியல் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி என்பது தான் உண்மை. 24 ஆண்டுகாலம் மலேசியாவின் பிரதமராக இருந்து, மலேசியாவை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர்,அவர்தான். துங்கு அப்துல் ரஹ்மான் மலேசியாவின் தந்தை என்றால் நவீன மலேசியாவின் தந்தை மஹாதீர் எனலாம்.

அவரால் உருவாக்கப்பட்டு, பிறகு அவரால் விரட்டப்பட்டு இன்று அவராலேயே அரவணைக்கப்பட்ட அன்வர் இப்ராகிமும், இணைந்திருப்பது ஒரு அரசியல் திருப்பு முனை.

ஆனால் மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சீன முதலாளிகள், மலேசியாவின் அரசியலையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திட இவர்கள் அனுமதித்து விடக்கூடாது.

அதுபோல் ‘ஹிண்ட்ராப்’ போன்ற, மற்றும் ISIS ஆதரவு போன்ற அமைப்புகளையும் தலைதூக்க அனுமதித்து விடக்கூடாது.

ஏனெனில் மலேசியா அமைதி தவழும்,ஒற்றுமை ஓங்கும் பல இன மக்களை மதிக்கும் தேசமாகவே போற்றப்பட வேண்டும்.

அதே நேரம் மேற்கத்திய சக்திகளால் சீரழிக்கப்பட்ட நைஜீரியா, அல்ஜீரியா,லெபனான், எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலை மலேசியாவுக்கு ஏற்பட மஹாதீரும், அன்வரும் அனுமதித்து விடக்கூடாது.

இதைதான் மலாய் சமூகமும் எதிர்பார்க்கிறது. ஆம். உலக அரங்கில் வலம் வரும் Malaysia truly Asia என்ற கவர்ச்சியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். அதன் வரலாற்று பாதை மாறி விட அனுமதிக்க கூடாது.

இன்று மக்கள் ஆதரவோடு மஹாதீர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார்,தீவிர அரசியலிலிருந்து 14 ஆண்டு காலம் ஒதுங்கி தாமே முன்வந்து பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்த ஒரு தலைவர், தனது நாட்டைக் காக்க, 92 வயதில் போராடியதை மலேசியா மக்கள் மதித்திருக்கிறார்கள். இது உலக சரித்திரத்தில் புதிய நிகழ்வாகும்.

அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுதலை பெற்றவுடன் மஹாதீர் தனது பிரதமர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுப்பர் என தெரிகின்றது.அதுவரை, அன்வரின் மனைவி துணைப் பிரதமராக அங்கம் வகிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆசியாவில் மிகச்சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று என்றும், சிறப்பான பொருளாதார கொள்கைகளையும் மதச்சார்பின்மையை பின்பற்றக் கூடிய ஒரு முஸ்லிம் நாடு என்றும் மலேசியா உலக அரங்கில் மதிக்கப்படுகின்றது.

மலேசியா மக்களின் எண்ணங்களை செயல் படுத்த மஹாதீரை மனமார வாழ்த்துகிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
10.05.2018