மஜக அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் இறையருளால் நடைபெற்றது…

⁠⁠⁠பத்திரிக்கை அறிக்கை

மனிதநேய ஜனநாயக கட்சி
அரசியல் மறுமலர்ச்சி மாநாடு
YMCA திடல், OMR சாலை – சென்னை

மார்ச் 26, 2016, சனிக்கிழமை

* கலீபா உமர் (ரலி) மைதானம்,
* காயிதேமில்லத் மேடை
* ஐயா பெரியார், போராளி ரோஹித் வெமுலா நுழைவாயில்கள்
* மவ்லவி. அப்துல் ரஹீம் வரவேற்பு வளைவு

மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் இறையருளால் நடைபெற்றது.

இதில் பொருளாளர், S.S.ஹாரூன் ரசீது,அவைத் தலைவர் மவ்லவி S.S. நாசிர் உமரீ, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. முகம்மது நாசர், துணைப் பொதுச்செயலாளர்கள் K.M. முகம்மது மைதீன் உலவி, செய்யது முகம்மது பாரூக், மதுக்கூர். ராவுத்தர்ஷா , கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை .செல்லச்சாமி , மாநிலச் செயலாளர்கள் A. சாதிக் பாட்ஷா, N.A.தைமிய்யா, கோவை . அமீர் சுல்தான் ,H. ராசுதீன், நாச்சிக்குளம் . தாஜுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் P. அனிஸ், A.அப்துல் பஷீர், புதுச்சேரி அப்துல் சமது, இளைஞரணி செயலாளர் J.ஷமீம் அஹமது, மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் மாநில செயலாளர் கோவை. பரக்கத் அலி, மனித உரிமைகள் அணி மாநிலச் செயலாளர் பல்லாவரம் .ஷபீக் , வணிகர் அணி மாநிலச் செயலாளர் N.E.M.யூசுப் ராஜா , மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் கோவை.நாசர் உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினர்.

லட்சக்கணக்கான மக்கள் திரண்ட இம்மாநாட்டில் கிழ்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1
உறுதியேற்பு

சமூகநீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் அரசியலில் நேர்மையையும் , பொதுவாழ்வில் கண்ணியத்தையும் நிலைநாட்டும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி செயல்படும் எனவும், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அவர்களது உரிமைகளுக்காக பாடுபடும் எனவும் இம்மாநாடு உறுதியேற்று முதல் தீர்மானத்தை பிரகடனம் செய்கிறது.

தீர்மானம் 2
தேர்தல் கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று, தேர்தலில் போட்டியிடுவது என்றும் இக்கூட்டணியின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு பணியாற்றுவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3
இட ஒதுக்கீடு

தற்போது முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்திட தொடர்ந்து குரல் கொடுப்பது என்றும், அடுத்து அமையப் போகும் அரசில் இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4
சிறைவாசிகள் விடுதலை

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் அண்ணா பிறந்த நாள், MGR பிறந்த நாள், அப்துல் கலாம் பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி விடுதலை செய்யும்படி தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி குரல் கொடுக்கும். இது குறித்து ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5
பூரண மதுவிலக்கு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது மனிதநேய ஜனநாயக கட்சியின் முக்கிய குறிக்கோளாகும் . தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இக்கோரிக்கைக்காக கட்சி தொடர்ந்து போராடும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது .

தீர்மானம் 6
சச்சார் கமிட்டி

சச்சார் கமிட்டி பரிந்துரைகள் நாடெங்கும் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது .

தீர்மானம் 7
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசு உரிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என இம்மாநாடு கோரிக்கை விடுக்கிறது .

தீர்மானம் 8
சட்டத் திருத்தம் தேவை.

மாநில அரசுகளே இட ஒதுக்கீட்டின் அளவுகளை தீர்மானித்துக் கொள்ளும் வகையில் , அரசியல் சாசன சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது . இது குறித்து மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் , இதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது .

தீர்மானம் 9
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம்.

பிழைப்புக்காக அயல்நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க , கேரள அரசைப்போல தமிழக அரசும் தனி அமைச்சகத்தை உருவாக்கவேண்டும் என்றும், இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது .

தீர்மானம் 10
இலங்கை அகதிகளின் நலன்.

தமிழகத்தில் உள்ள முகாம் களில் வசிக்கும் இலங்கை அகதிகள் மீது
தனிக்கவனம் செலுத்தி அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து தர வேண்டும் எனவும் , அம்மக்கள் எந்த வித அச்சுறுத்தலின்றி தமிழகத்தில் வாழ வழி வகை செய்ய வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11

சிறுபான்மை மொழிகள் பாதுகாப்பு.

கடந்த 1967ம் ஆண்டு முன்பு வரை தமிழகம் முழுவதிலும் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உருது மொழி விருப்ப பாடமாக இருந்தது. 1967க்கு பிறகு உருது மொழிப்பாடம் படிப்படியாக நீக்கப்பட்டது . தமிழகம் முழுவதும் உருது மொழியை தாய் மொழியில் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உருது மொழிப் பாடசாலைகளை ஆரம்பிக்க தமிழ்நாடு அரசு உருது அகாடமி மூலம் நிறுவ உறுதியளிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. மேலும் தமிழகத்தில் கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,உருது உள்ளிட்ட மொழி சிறுபான்மை மக்களின் மொழியுரிமைகள் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வழியுறுத்துகிறது .

தீர்மானம் 12
ஹஜ் பயணிகளின் வசதிகள்.

தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் செல்லும் புனிதப் பயணிகள் சென்னை வந்து செல்வதால் புனிதப் பயணிகளுக்கு பொருட்செலவும், நேரமும் விரயமாகிறது. எனவே மதுரை, கோவை, திருச்சியில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் மூலம் பயணிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என
இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 13
மீனவர்களின் பாதுகாப்பு.

தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து இன்னல்களை கொடுக்கும் இலங்கை கடற்படையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது . ஒரு நாள் விட்டு ஒரு நாள் முறைவைத்து , இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் மீன்பிடிக்க மத்திய அரசு , இலங்கை அரசுடன் பேசி ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது .

தீர்மானம் 14

விவசாயம்.

நாடு முழுக்க விவசாயிகள் கடனாளிகளாக மாறிவருவதும், விவசாய தொழில் மீது ஆர்வம் குறைந்து வருவதும் எதிர் காலத்தில் சமூக பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இம்மாநாடு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. எனவே விவசாயத்தை வளர்த்தெடுக்கும் வகையில் புதிய செயல் திட்டங்களை உருவாக்குவதில் வேளாண் விஞ்ஞானிகள் கவனம் செலுத்துவதோடு, இயற்கை விவசாயத்தை மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இதனை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் மத்திய அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை போடவேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 15
பல்கலைக் கழக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டின் அறிவுக் களஞ்சியங்களாக திகழும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் , டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உரிமைகளை பறிக்க முயலும் மத்திய அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது . மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மீது மத்திய அரசின் துணையோடு மதவாத சக்திகள் கொடுக்கும் நெருக்கடிகளை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது . நாட்டை நாசமாக்க துடிக்கும் தீய சக்திகளின் திட்டங்களை புறந்தள்ள வேண்டும் என்றும் கல்வி நிலையங்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது .

தீர்மானம் 16
நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

காவிரி , முல்லை பெரியாறு , பாலாறு ஆகிய நதிநீர் உரிமைகளில் தமிழகம் தொடர்ந்து முறையே கர்நாடகா ,கேரளா மற்றும் ஆந்திர மாநில அரசுகளால் வஞ்சிக்கப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு குறுக்கே தடுப்பணைகளை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியிருக்கிறது . இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் , நதிநீர் உரிமைகள் பாதுகாக்கப்பட புதிய சட்டதிருத்தம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது .

தீர்மானம் 17
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி.

தமிழகத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் பங்கேற்பு திருப்திகரமாக இல்லை . எனவே காலியாக உள்ள நீதிபதி இடங்களில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது .

மஜக ஊடகப் பிரிவு தொடர்புக்கு : 8148857571 , 9710209608 , 9788857018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.