தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை! மஜக வரவேற்கிறது!

தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சமர்பித்துள்ள நிதிநிலை அறிக்கை பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும், காலை சிற்றுண்டி திட்டம் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையின் நட்சத்திரங்கள் என கூறலாம்.

மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 1444 கோடி ரூபாய், அதிகபட்ச அளவாக பள்ளிக்கல்வித்துறைக்கு 40299 கோடி ரூபாய், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 1500 கோடி ரூபாய் என நிதி ஒதுக்கீடு செய்திருப்பது திருப்திகரமாக இருக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும், கோவை, மதுரை மாநகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தப்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் பாராட்டத்தக்கது.

15 புதிய நீரேற்று மின் திட்டங்கள், வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் விரிவாக்கம், 33,000 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம், நெல்லையில் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்ற அறிவிப்புகளும் குறிப்பிடத்தக்கது.

தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் ஆகியவற்றை பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால் சச்சார் கமிட்டி பரிந்துரைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் கவனத்தில் கொள்ளப்படாதது வருத்தம் அளிக்கிறது.

இந்த குறையை போக்கிடும் அறிவிப்புகளை நடப்பு கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்கள் வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும்போது வளர்ச்சி மற்றும் ஆக்கப்பூர்வமான நோக்கை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது என்பதால் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இதை வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.

இவண்

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
20.03.2023