நன்கொடை சேகரிப்போம்… நலத்திட்டங்களை முன்னெடுப்போம்!

பாசத்திற்குரிய மனிதநேய சொந்தங்களே…

ஏக இறைவனின் அமைதியும் ஆசியும், சூழ்க..

குறுகிய காலத்தில் மற்றுமொரு மடல் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நமது எட்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கடந்த பிப்ரவரி 28 அன்று தஞ்சை மாநகரில் நாம் எல்லோரும் கூடி மகிழ்ந்தோம்.

அந்த பொன்னான நினைவுகள் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

வேலை நாளான செவ்வாய்க்கிழமை அன்று; ஒரு வார கால அவகாசத்தில்; தமிழகமெங்கிருந்தும் மஜக-வின் பிரதிநிதிகள் கூடி; 20 வகையான நிகழ்ச்சிகளுடன்; சங்கமம் நிகழ்வை உற்சாகமாக நடத்திய பூரிப்பு இன்னும் அகலவில்லை.

அந்த உற்சாகத்தில் புதிய கிளைகள் உருவாக்கம்; புதிய உறுப்பினர்கள் வருகை; கொடியேற்றம் என மஜ-கவின் பணிகள் புது ரத்தம் பாய்ச்ச பட்ட உணர்வுடன் எழுச்சி அடைந்திருக்கிறது.

இதைத்தான் எதிர்பார்த்தோம்.

ஓரமாக நின்றவர்கள், ஒதுங்கி இருந்தவர்கள், ஓய்வில் இருந்தவர்கள் என எல்லோரும் தீவிர கட்சிப் பணிகளில் இறங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ராணுவ வீரர்களைப் போல நமது தொண்டர்கள் களமாடுவதும், கலகத்தை ஒடுக்குவதும், பகையை பந்தாடுவதும், கட்சியை காக்க நினைப்பதும், நமது புதியபாதை – புதிய பயணத்தில் மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது.

சொந்தங்களே..

நமது தொண்டர்கள் முன்பை விட வீரியமாக இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அது பயனுள்ள வகையில் வழிநடத்தப்பட வேண்டும்.

வேர்களை பாத்தி கட்டி பாதுகாக்க நினைப்பதும்; இறகுகளால் ஆகாயத்தை அளவிட நினைப்பதும் தவறில்லை..

லட்சியங்களை வெல்ல அசாத்திய துணிச்சலோடு ; அளப்பரியா தியாகங்களோடு, பயணிப்பதும் தவறில்லை.

ஆனால், அதற்கான ஏற்பாடுகளோடு; முன் தயாரிப்புகளோடு; நுட்பமான திட்டமிடலோடு; நகர்தல் அவசியமாகும்..

இன்றைய காலத்தில் அரசியல் என்பது வணிகமயமாகி இருக்கிறது.

இதனை நேர்மையும், கொள்கையும், தியாகமும், கொண்டவர்களால் ஏற்க முடியாது.

அரசியலில் பணத்தை கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்பதை ஏற்கவே முடியாது.

ஆனால் நம்மை போன்ற கோட்பாட்டு அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு; அடிப்படை பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும், நிதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்தங்களே….

நாம் கொக்கோகோலாவில் குளிக்க வேண்டும்; பெப்ஸியில் நீச்சல் அடிக்க வேண்டும் என கார்ப்பரேட் கட்சிகள் நினைப்பது போல பேராசைப்படவில்லை. பெரும் எதிர்ப்பார்ப்புகளும் நமக்கு இல்லை.

தாகம் தணிக்க தண்ணீர் வேண்டும் என்ற உழைப்பாளியின் தேவையை போலவே; நிதி விஷயத்தில் நமது எதிர்பார்ப்பு இருக்கிறது.

சொந்தங்களே…

நம்மிடம் மாதாந்திர நிர்வாக செலவுகளுக்கு கூட கட்டுப்பாடு இருக்கிறது. அதற்கே தட்டுப்பாடும் இருக்கிறது.

எத்தனை நாட்களுக்கு இதே நிலையில் நீடிப்பது? எப்படி தொடர்ந்து பயணிப்பது? என்ற கேள்விகளும் எழுகிறது .

எனவேதான் மார்ச் 20 முதல் ஏப்ரல் 20- 2023 வரை ஒரு மாத காலத்தை மஜக-வின் நன்கொடை சேகரிப்பு மாதம் என அறிவித்துள்ளோம்.

இக்காலகட்டத்தில் மக்களை சந்தித்து நமது சாதனைகளை, சேவைகளை, களப்பணிகளை, எடுத்துக் கூறி நிதி திரட்டுங்கள் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.

குறைந்தபட்சம் 100 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிதியை திரட்டி; நன்கொடை தந்தவர்களுக்கு நன்றி கூறி ரசீதுகளை வழங்க வேண்டுகிறோம்.

குருவி இரை சேர்ப்பது போல, நீங்கள் திரட்டும் நிதியை கிளைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கும், சேவைகளுக்கும், ஆதாரமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அதில் 25 சதவீதம் மாவட்ட நிர்வாகங்களுக்கு தாருங்கள்.

தலைமைக்கும் மனமுவந்து ஒதுக்குங்கள்.

* மருத்துவ சேவைகள்

* கல்வி உதவிகள்

* ஆம்புலன்ஸ் சேவைகள்

* பொது நிகழ்ச்சிகள்

* கட்சிப் பணிகள்

என அனைத்திற்கும் இந்த நிதியிலிருந்து செலவுகள் செய்ய திட்டமிடுங்கள்.

சொந்தங்களே..,

நன்கொடை சேகரிக்க கூச்சப்பட தேவையில்லை.

தவறான முறையில் நன்கொடை திரட்டுவதை விட; நேர்மையான முறையில் மக்களிடம் நிதி திரட்டுவதே உயர்வானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மக்களிடமிருந்து நிதி பெறும் போதுதான், பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

எனவே நேரம் ஒதுக்கி இம்மாதம் முழுக்க நிதி திரட்டுவதில் ஈடுபடுங்கள் .

‘நேர்மையே
நமது விதி…

அதற்கு தேவை மக்களிடம் இருந்து நிதி’
என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள். கட்சி வளர்ச்சிக்கு உதவுங்கள் .

நன்றி
அன்புடன்

மு. தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20.03.2023