தஞ்சையில் நினைவேந்தல்… உபையதுல்லாவின் நேர்மையும் எளிமையும்….! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

கடந்த பிப்ரவரி 19 அன்று இறந்த, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா அவர்களளுக்கு சமூக ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும், வணிகர்களும் இணைந்து தஞ்சாவூரில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர்.

இதில் குன்றக்குடி அடிகளாரும், மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரியும், பாதிரியார் அமுதன் அடிகளாரும் பங்கேற்றனர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும் போது அவரது எளிமையையும், அரசியல் நேர்மையையும் பாராட்டினார்.

மேலும் அவர் பேசியதாவது….

அவர் 14 வயதிலேயே ‘திராவிடம் வெல்க’ என கரும்பலகையில் எழுதி கொள்கையை பேசினார். இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும் ஊக்குவித்தார்.

வெளியில் சொல்லாமல் அவர் தர்மங்களையும், உதவிகளையும் சாதி, மதம் பாராமல் செய்தார்.

அவர் அமைச்சராக இருந்தபோது, தனது மகன் இறந்த அன்று அந்த துக்கத்தையும் தாங்கிக்கொண்டு, கடமை தவறாமல் ஜனாதிபதியை வரவேற்க திண்டுக்கல்லுக்கு சென்றார். இதை அறிந்த ஜனாதிபதி அவரை வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

2006 தேர்தலில் இவர் போட்டியிட சீட் கேட்கவில்லை. இதை அறிந்த கலைஞர் அவரை அழைத்து போட்டியிட சொல்லி, பிறகு அமைச்சராக்கினார்.

அவரை நாணயத்தின் மறுபதிப்பு என்றார் கலைஞர்.

அதனாலேயே வணிக வரித்துரையை அவருக்கு வழங்கினார்.

அவருக்கு தமிழக அரசு அண்ணா விருதை வழங்கியபோது, அலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். பதிலுக்கு அவர் எனது ‘புயலோடு போராடும் பூக்கள்’ கவிதை தொகுப்பை படித்ததாக கூறி பாராட்டினார்.

பிறரை ஊக்குவிப்பதில் அவர் சளைக்காத பண்பாளராக இருந்தார்.

இவ்வாறு அவர் குறித்த பல சிறப்புகளை பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பட்டியலிட்டு பேசினார்.

அவர் பேசி முடித்ததும் குன்றக்குடி அடிகளார் அவர்கள், அருமையான – இடத்திற்கேற்ற உரை என்றும், இதயத்தை தொடும் வகையில் இருந்ததாகவும் கூறி பாராட்டினார்.

இந்நிகழ்வை மஹாராஜா ஜவுளி குழுமத்தை சேர்ந்த ஆசிப் அலி, செழியன், புலவர்கோபால், கவிஞர் இனியன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தஞ்சையை சேர்ந்த அரசியல் சார்பற்ற பலரும் அவரது சேவைகளை பாராட்டி பேசினர்.

துரை சந்திரசேகர் MLA, நீலமேகம் MLA, மேயர் சன்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மஜக மாநில துணை செயலாளர் வல்லம் அகமது கபீர் ஆகியோரும் பங்கேற்றனர்.

மஜக மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் மஹ்ரூப், பஹ்ரைன் மண்டல செயலாளர் ரியாஸ், மாவட்ட செயலாளர் தஞ்சை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப், நகர நிர்வாகிகள் சாகுல், காமில், முபின், அக்ரம், ஷேக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அரங்கிற்கு வெளியேயும் கூட்டம் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.