திருச்சியில் நடைபெற்ற மஜக தலைமை சிறப்பு நிர்வாகக்குழுவின் தீர்மானங்கள்..!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் இன்று திருச்சியில் ஹோட்டல் பேலசில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது..

இதில் அவைத்தலைவர் மன்னை செல்லச்சாமி, இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ, துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன், மாநில செயலாளர்கள் நாகை முபாரக், கோவை M.H.ஜாபர் அலி, பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்றனர்

மேலும் மாநில துணை செயலாளர்கள் பாபு ஷாஹின்ஷா, நெய்வேலி இப்ராஹிம், துரை முகம்மது, அஹமது கபீர், பேராவூரணி சலாம், அஸாருதீன், ஜாவித் ஜாபர், ஹாரீஸ், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக், ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…

1) கடந்த 07.02.2023 அன்று 37 மாவட்டங்களின் எழுத்துப்பூர்வ பரிந்துரைக்கு பின்பு, சிறப்பு நிர்வாகக் குழு ஒத்துழைப்புடன், தலைமை நிர்வாக குழுவால் இறுதி செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், கட்சியின் பெயரை பயன்படுத்தி, கட்சிக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் யாவரும் குடும்ப சொந்தங்களாக பயணிக்கும் எமது சமூக நீதி பயணத்தை எவராலும் குலைக்க முடியாது என இக்கூட்டம் பிரகடனப்படுத்துகிறது.

2) கட்சியின் தலைமைக்கு எதிராக செயல்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் வரம்பு மீறி கட்சியின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியின் அமைப்பு நிர்ணயச் சட்டம், பக்கம் 31- விதி 37, உட்பிரிவு 2-ன் கீழ் கன்னியாகுமரி, தூத்துக்குடி புறநகர், வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, அங்கு அனைத்து நிலைகளிலும் உள்ள பொறுப்பாளர்களும், தாங்கள் வகித்து வந்த கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என இக்கூட்டம் முடிவு செய்கிறது.

3) கடந்த 07.02.2023 அன்று நடைபெற்ற தலைமை செயற்குழுவை தொடர்ந்து, கட்சியின் பொருளாளராக செயல்பட்டு வந்த ஹாருன் ரசீது, அவைத்தலைவராக செயல்பட்டு வந்த நாசர் உமரி ஆகியோரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரிந்துரைத்த 37 மாவட்டங்கள், 6 மாநில அணிகள், 7 வெளிநாட்டு மண்டலங்கள் ஆகியவற்றுடன், பிறகு இம்முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் இயற்றிய மேலும் 4 மாவட்டங்களின் அவர்களது உணர்வு பூர்வமான கட்சி பங்களிப்பை இக்கூட்டம் கனிவுடன் கவனத்தில் கொள்கிறது.

4) விழுப்புரம் தெற்கு, கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்ட நிர்வாகிகளின் பொறுப்புணர்வுடன் கூடிய வேண்டுகோளை ஏற்று, அவர்களை கட்சியின் ஆய்வு குழு நேரில் அழைத்து பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

5) தலைமை செயற்குழு தவிர, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி கட்சி பணிகளை விவாதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

6) தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராகவும், சமூக வலைதளங்களில் வரம்பு மீறியும் கருத்துகளை வெளிப்படுத்தி வரும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் சாகுல் அவர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்திலும் இருந்து இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

7) கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய சென்னை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களும், செங்கல்பட்டு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களும் இணைக்கப்பட்டு ஒரே மாவட்டமாக இனி செயல்படும் என்று முடிவு செய்யப்படுகிறது.

தற்போதைய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் ஒன்றுபட்ட மத்திய சென்னை மாவட்டத்தின் நிர்வாகமாகவும்,

தற்போதைய செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகமாகவும் செயல்படும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.

8) கடந்த 31.01.2023 அன்று தலைமை நிர்வாக குழுவில் எடுக்கப்பட்ட முடிவு படி கோவை மாநகர் மாவட்டத்தில் இரண்டு மாதங்கள் செயல்படாமல் அமைதி காக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிராகரித்து, கட்சியின் கண்ணியத்தை பொதுவெளியில் பாழ்படுத்தியதற்காக அதன் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன் ஆகியோர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

மேலும் தலைமையின் வழிகாட்டலை ஏற்று, கட்டுப்பட்டு செயல்பட்ட காரணத்தினால் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையிலான இதர நிர்வாகிகளை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது என்றும், அவர்கள் மாவட்டத்தின் அனைத்து மட்ட நிர்வாக அமைப்புகளையும் மாற்றி அமைத்திடவும் இக்கூட்டம் ஒப்புதல் வழங்குகிறது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான முறையில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.