நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்கள் கைதுசெய்யப்படவேண்டும்!

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகின் சிறந்ததொரு வழிகாட்டியாக பல தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.

14 நூற்றாண்டுகளை கடந்தும் அவரது இறைச் செய்திகளும், அறிவுரைகளும் அன்றாடம் உயிர் துடிப்போடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அவரது ஆளுமை என்பது காலங்களை கடந்து வரலாற்றை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அதனால்தான் முஸ்லிம்கள் மட்டுமின்றி பல சமூக மக்களும் போற்றும் தலைவராக அவர் மதிக்கப்படுகிறார்.

அவ்வப்போது சகிப்புத்தன்மையற்றவர்களும், புரிதலற்றவர்களும் அவர் முன் வைத்த கொள்கைகளையும், அவரையும் காயப்படுத்தும் போதெல்லாம் உலகம் அதிர்கிறது .

சமீப காலமாக நமது நாட்டில் காவி வலதுசாரி சக்திகள் வெறுப்பு அரசியலை வேகமாக வளர்த்து வரும் நிலையில், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா என்பவர் நபிகள் நாயகத்தை திட்டமிட்டு அவதூறு செய்திருக்கிறார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக, எதைப் பேசினாலும் காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் துணைபுரியும் என்ற துணிச்சலில்தான் இப்படிப்பட்ட பேச்சுகள் வெளிப்படுகின்றன.

ஒன்றிய அரசை ஆளும் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் விஷமப் பேச்சு, உலகின் பல நாடுகளால் கண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை காப்பாற்றும் வகையில் அவரும், அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் என்பவரும் பாஜக விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு இது தீர்வல்ல.

இவர்களின் மீது மதக் கலவரத்தை தூண்டும் கடும் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

அப்போதுதான் இது தொடராமல் தடுக்கப்படும்.

வெறுப்பு பேச்சுகளை நெருப்பு வீசி வளர்த்தால் அது தீப்பிடித்து விடும் என்பதை இனியாவது உரியவர்கள் உணர வேண்டும்.

இது போன்ற வெறுப்பு பேச்சுகளை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் எனவும், தீய சக்திகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,

06.06.2022