தியாகத்தை முன்னிறுத்தும் திருநாளான பக்ரீத் பண்டிகை உலகம் முழுக்க ‘ஈதுல் அல்ஹா’ என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது.
மனிதர்களை மனிதர்களே கொல்லும் நரபலியை தடுத்து; ஆடு, மாடு, ஒட்டகங்கள் என பல்கிப் பெருகும் கால்நடைகளை இறைவனுக்காக அறுத்துப் பலியிட்டு ; அதன் கறியை ஏழைகளுக்கு வினியோகிக்கும் முறையை, இறை தூதர்களில் ஒருவரான நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
தனது தவப்புதல்வர் இஸ்மாயில் (அலை) அவர்களை ; தான் கண்ட கனவின் படி ; இறைவனுக்காக அறுத்துப் பலியிட அவர் துணிந்த போது;இறைவனிடமிருந்து வந்த கட்டளை அதை தடுத்து நிறுத்தியது.
அவரது இறைப்பற்றை சிலாகித்து ; அதற்கு பகரமாக ஒரு ஆட்டை பலியிடுமாறு அந்த இறை கட்டளை அறிவுறுத்தியது.
அந்த நிகழ்வே தியாகத்திருநாளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இத்திருநாளில் ஒரு மாபெரும் சமூக நல்லிணக்கமும் அடங்கியிருக்கிறது.
இறைத்தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், யூதர்கள் என மூன்று பெரும் சமூகங்களால் போற்றப்படுபவர்.
அவர் மூலம் நிகழப் பெற்ற ஒரு வரலாற்று சம்பவத்தை, இறைவனின் இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தியாகத் திருநாளாக கொண்டாட அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
அதன்படியே உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இத்திருநாளை கொண்டாடுகிறார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை புனித மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் வாழ்வின் அழுக்குகளை போக்கிக் கொள்ளும் உன்னத நிகழ்வும் இத்திருநாளையொட்டியே நடைபெறுகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இத்திருநாள் கோலாகலமாக கொண்டாட முடியாத நிலையில், இவ்வாண்டு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடும் வாய்ப்பு உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் இத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தியாகங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன.
கொரோனா காலகட்டத்தில் தியாக பூர்வமாக பணியாற்றும் அனைத்து முன் கள பணியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து ; மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஓங்க அனைவரும் இத்திருநாளில் உறுதியேற்போம் என கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,,
மு.தமிமுன் அன்சாரி ,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
20.07.2021