கொரோனா எளிய திருமணங்களுக்கு வழிகாட்டுகிறது! மஜக இல்ல மணவிழாவில் பொதுச்செயலாளர்மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

ஜூலை 15., திருவாரூர் மாவட்ட மஜக பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லாவின் மகன் S. அன்சாரி மணமகனுக்கும், பாக்கம் கோட்டூரை சேர்ந்த முகம்மது ரபீக் அவர்களின் மகள் மணமகள் ஜாஸ்மின் அவர்களுக்கும் இன்று பாக்கம் கோட்டூர் ஜாமியா மஸ்ஜிதில் திருமணம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது கூறியதாவது…

கொரோனா காலத்தில் குறைவான நபர்களுடன் இத் திருமணத்தை அண்ணன் ஷேக் அப்துல்லா நடத்தியிக்கிறார்.

கொரோனா தொற்று அலைகள் எப்போது முடியும் என்று யாராலும் கூற முடியவில்லை. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என அர்விந்த் கெஜ்ரிவால்தான் முதலில் சொன்னார்.அது தான் இப்போது நடக்கிறது.

கல்வி, வணிகம், சுற்றுலா ஆகியன பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

மாதம் 15 ஆயிரத்திற்கும் கீழ் சம்பாதித்தவர்களின் அன்றாட வாழ்க்கை நிலை குலைந்துள்ளது.

30 ஆயிரத்திற்கும் கீழ் சம்பாதித்தவர்கள் கெளரவம் காரணமாக வெளியே கூற முடியாமல் நெருக்கடியில் திணறுகிறார்கள்.

வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. சம்பளம் குறைக்கப்படுகிறது. அங்கு புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை.

வருவாய் இழப்பு, பொருளாதார மந்தம் காரணமாக எங்கும் வாழ்வாதார நெருக்கடி நிலவுகிறது.

கொரோனா ஏற்படுத்திய பல பாதிப்புகள் இன்னும் ஈராண்டுகளுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இக்கால கட்டத்தில் சிக்கனமான வாழ்க்கை முறை அவசியமாகிறது.

நல்ல வேளையாக இது போன்ற தருணங்களில் திருமணங்களை எளிமையாக நடத்துவது அதிகரித்திருக்கிறது. இது வரவேற்கத்தது.

எளிமையாக நடைபெறும் திருமணங்களில் இறைவனின் அருளும், ஆசியும் கிடைக்கிறது என நபி (ஸல்) கூறியிருப்பதை இங்கு இந்த அவையில் நினைவூட்டுகிறேன்.

கொள்கை ரீதியாக இல்லாவிட்டாலும், கொரோனா ரீதியாகவாவது எளிமையாக திருமணங்களை நடத்த வேண்டும்.

இந்த கால கட்டத்தில் திருமணத்தை எளிமை படுத்துவதன் மூலம் நடுத்தர குடும்பங்களுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பொருளாதாரம் மிச்சமாகிறது.

பல ஊர்களில் 2 அல்லது 3 திருமண நிகழ்வுகள் ஒன்றாக நடை பெற்று, செலவுகள் பகிர்ந்துக் கொள்ளப்படுவதும் ஒரு நல்ல செய்தியாகும்.

சில ஊர்களில் திருமணத்திற்கு குறைவானவர்களை அழைத்து நடத்திவிட்டு, மற்றவர்களுக்கு விருந்துணவை வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் புதிய முறையும் உருவாகியிருக்கிறது.

பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள இக்கால கட்டத்தில், எளிமையான திருமண முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கொரோனா அதற்கு வழிகாட்டுகிறது.

பிறர் நடத்துவது போல நாமும் நடத்த வேண்டும் என திருமண நிகழ்வை அந்தஸ்துக்குரிய ஒன்றாக இனியும் கருதப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அவரவர் சக்தியை எண்ணிப் பார்க்க வேண்டும். கடனாளியாக மாறுவது தடுக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இத்திருமணம் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுவது பாராட்டத்தக்கது.

இந்த மணமக்கள் நபி வழியில் பல்லாண்டு வாழ வாழ்த்தி , பிரார்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவருக்கு பாக்கம் – கோட்டூர் ஜமாத்தார் சார்பில் சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

பிறகு அங்கு மஜக சொந்தங்கள், மற்றும் பொதுமக்களுடன் பொதுச் செயலாளர் அவர்கள் சந்திப்புகளை நடத்தினார்.

இந்நிகழ்வுகளில் மாநிலச் செயலாளர் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் . தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், நாகை மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜம் ஜம் சாகுல், பொதக்குடி ஜெய்னுதீன், நாகை மாவட்ட துணைச் செயலாளர் ஏனங்குடி யூசுப் மற்றும் நாகை, திருவாரூர் மாவட்ட மஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பிறகு ஏனங்குடி, திட்டச்சேரி, நாகை, கூத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள மஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு பொதுச் செயலாளர் சென்று நலம் விசாரித்தார்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
15.07.2021