விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிடுக… களத்தில் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!


ஜன.18,

நாகை தொகுதியில் மார்கழி தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய கிராமங்களை இன்று இரண்டாம் கட்டமாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி நாற்றம் வீச தொடங்கியிருப்பதை வயலில் இறங்கி பார்வையிட்டார்.

பாலையூர், வடகுடி, பெருங்கடம்பனூர், புலியூர், சங்க மங்கலம், சிக்கல், ஆழியூர், தேமங்கலம், பட்டமங்கலம், கடம்பர வாழ்க்கை, கில்லுக்குடி, சிரங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று விளை நிலங்களை பார்வையிட்டார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது..

தற்போது பெய்த மார்கழி மழையால் விளைச்சல் பரவலாக 100 சதவீதம் பாதித்துள்ளது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிக் கொண்டிருக்கின்றன. பல இடங்களில் நெற்பயிர்கள் முளை விட்டு வளர்ந்திருக்கின்றன.

வயல்களில் அறுவடை இயந்திரங்களை இறக்க முடியாத நிலையும் உள்ளது.

இதை மத்திய அரசு தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்க வழி செய்ய வேண்டும். விளைச்சலில் அடிப்படையில் இல்லாமல் பாதிப்பின் அடிப்படையில் அதை வழங்க வேண்டும்.

தமிழக அரசு நிலவரத்தை கவனத்தில் கொண்டு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்.

இடுபொருள் இழப்பீடாக வழங்கிய தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என புகார்கள் வருகிறது. அதை முழுமையாக வழங்க வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். அங்கு உலர் இயந்திரங்களை கொண்டு வர வேண்டும்.

தமிழக அரசு நிர்ணயித்த வாடகை கட்டணத்தை மட்டுமே வசூலிக்க தனியார் அறுவடை இயந்திர நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும்.

நிலங்களில் வட இந்திய தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரியும் போது, அவர்கள் VAO சான்றிதழ் பெற வலியுறுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் போராடவும் நாங்கள் தயங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

மோட்டார் சைக்கிளிலும், பல இடங்களில் நடந்தே சென்றும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்புகளில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் S.ராமதாஸ், மாவட்ட பொருளாளர் வேலாயுதம், மாவட்ட துணை தலைவர் SKS சண்முகம், கடைமடை விவசாய சங்கத் தலைவர் தமிழ் செல்வன் மற்றும் நாகை முபாரக், சதக்கத்துல்லாஹ், ஜலால் உள்ளிட்டோரும், பல விவசாய சங்க பிரதிநிதிகளும் உடன் சென்றனர்.

தகவல்,

#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.