உலகின் பல்வேறு பகுதிகளில் 200 கோடி மக்கள் கொண்டாடும் உன்னத பண்டிகைகளில் ஒன்று ஈதுல் அல்ஹா எனும் தியாகத்திருநாள் ஆகும்.
நம் நாட்டில் பக்ரீத் பண்டிகை என்றும் ஹஜ் பெருநாள் என்றும் பல்வேறு பெயர்களில் இது கொண்டாடப்படுகிறது.
முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் போற்றும் நபி இப்ராகிம் (அலை) அவர்கள், தான் கண்ட கனவின்படி, தன் அருமை மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்தார்.
அப்போது வந்த இறைக்கட்டளை ஒன்று மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறியது. அதன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.
இறைக்கட்டளை என்றதும், தவமாய் தவமிருந்து பெற்ற தன் அருமை மகனையே பலிக் கொடுக்க முனைந்த இந்த தியாகம் தான் இப்பண்டிகையின் பின்னணியாகும். ஆம். தியாகங்கள் தான் வரலாறுகளாகும்.
இதை நினைவு கூறும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் படி, அன்று முதல் இன்று வரை பல்கிப் பெருகும் கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை முஸ்லிம்கள் பலியிட்டு அதன் இறைச்சியை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள்.
உன்னிப்பாக கவனித்தால் இது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சமநிலையை பாதுகாக்க உதவுகிறது என்பதையும் அறிய முடியும்.
இன்று உலகம் முழுக்க கொரோனா நெருக்கடி நிலவும் சூழலில், கொண்டாட்டங்கள் இன்றி வீடுகளில் தொழுது, குர்பானியுடன் இப்பெருநாளை முஸ்லிம்கள் கடந்து செல்கிறார்கள்.
இப்பெருநாளில் கொரோனா எனும் கொடிய நோய் தொற்று ஒழிந்து, உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திப்போம். அதற்கு எதிராக களமாட உறுதியேற்போம்.
அந்த பிரார்த்தனையோடு அனைவருக்கும் இதயம் கனிந்த ஈதுல் அல்ஹா எனும் தியாகத்திருநாள் வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
31.07.2020