ஐந்தாம் ஆண்டில் மஜக, கோவையை நோக்கி புறப்பட்டு வாரீர்! முதமிமுன்அன்சாரி MLA அழைப்பு!

எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிரும் மனிதநேய ஜனநாயக கட்சி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அனைத்து மக்களையும் சமூக நீதி களத்தில் சகோதர – சகோதரிகளாக இணைக்கும் தங்க பாலத்தை கட்டியமைக்கும் மனிதநேய பணிகளை ; நுட்பமாக செய்து வெற்றி கண்டிருப்பதே இதன் நான்காண்டு சாதனைகளில் முதன்மையானதாகும்.

சந்தர்ப்பவாத பகட்டு அரசியலில் பொழுது போக்காமல், அனல் கக்கும் போராட்ட களங்களில் இதன் தொண்டர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.

நமக்கேன் வம்பு? என்று பலரும் கண்டும் காணாமல் போகும் விவகாரங்களில்; துணிந்து களமாடி உரிமைகளை பெற்றுக் கொடுத்தல், எல்லோருக்கும் நல்லவர்களாக நடிப்பதை விட சத்தியத்தின் பக்கம் நிற்பதே அறமாகும் என்ற கோட்பாட்டோடு உழைத்தல், தவறுகள் தலைக்காட்டும் இடங்களில் மௌனங்களை பேணாமல் நிசப்தத்தை உடைத்து நீதியை நிலைநாட்டுதல் ஆகியன மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியலுக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

அரசியல் சூறாவளிகளில் நிலைக்குலைந்து விடாமல், தவறான முடிவுகளெடுத்து தடுமாறி விடாமல் நேர் கோட்டில் பயணிக்கும் துணிச்சல் இறையருளால் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

இதோ.. விழிகளில் லட்சியங்களை சுமந்துக் கொண்டு இதயங்களில் நம்பிக்கைகளை விதைத்துக் கொண்டு நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் ஐந்தாம் ஆண்டில் இன்று பிப்.28 ல் அடியெடுத்து வைக்கிறோம்.

இதை முன்னிட்டு நாளை பிப்ரவரி 29 அன்று நாட்டின் அரசியல் சாசன சட்டத்தையும், ஜனநாயகத்தையும், பன்முக கலாச்சாரத்தையும், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகியவற்றையும் கட்டிக் காக்கும் நோக்கோடும், CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்தும் தமிழகம் தழுவிய அளவில் கோவை மாநகரில், வாழ்வுரிமை மாநாட்டினை நடத்தவிருக்கிறோம்.

இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இது தேசமே திரும்பி பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாக அமையப் போகிறது.

மனிதநேய சொந்தங்களுக்கு ஐந்தாம் ஆண்டின் தொடக்க விழா வாழ்த்துக்களை கூறும் இனிய நேரத்தில், குடியுரிமை காக்கும் அறப் போரில், அமைதி வழியில் மக்களை திரட்டி அணி திரட்டி , கோவையை நோக்கி புறப்பட்டு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்!

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,

பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

28/02/2020