ஜன.29.,
திண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடியில் சமூக நீதிக்காவலர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் KM.ஷெரீப், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:-
https://m.facebook.com/story.php?story_fbid=2244556205644142&id=700424783390633
நான் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு முன்பாக உரை தயாரிப்பு குறித்து கவனம் செலுத்துவேன் ஆனால் இந்நிகழ்ச்சிக்கு வரும்போது, பணி பளு காரணமாக உரை தயாரிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதை காரில் வரும்போது மஜக நிர்வாகிகளிடம் கூறினேன்.
நான் அது பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில், பாபா அவர்கள் நம் உணர்வில் கலந்திருக்கிறார், உள்ளத்தில் பதிந்திருக்கிறார்.அவர் பிறந்த ; அவர் விதைக்கப்பட்ட ஊரில், வரும்போதே ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
1993ஆம் ஆண்டு அகில இந்திய ஜிஹாத் கமிட்டி சார்பில் மயிலாடுதுறையில் பிரம்மாண்டமான மாநாடு நடந்தது. அதில் கூரை நாடு முதல் மயிலாடுதுறை பூங்கா நகரம் வரை பேரணி நடந்தது.
பேரணியை டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.பழனிபாபா, டாக்டர்.சேப்பன், ஆகியோர் பார்வையிட்டனர்.
நாங்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றோம். அப்போதுதான் பாபாவை முதன் முதலில் பார்த்தேன்.
பாமகவில் செயல்பட்டுக் கொண்டிருந்த பெரியவர் மாரிமுத்துக் கவுண்டர், வேதாரண்யம் ஒன்றிய பாமக செயலாளர் ராஜேந்திரன், ஆகியோர் என்னை மேடைக்கு அழைத்து சென்று பாபாவிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவர் கை கொடுத்து வாழ்த்துக்கூறினார். அதுவே அவருடன் முதலும் இறுதியுமான சந்திப்பாகும்.
அவர் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சிறுபான்மையினரையும் இணைக்கும் அரசியலை முன்னெடுத்தார்.
வன்னியர் சங்கம், தேவர் பேரவை, நாடார் சங்கம், யாதவர் சங்கம், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை, மற்றும் தலித் அமைப்புகளோடு நல்லுறவு ஒப்பந்தங்களை போட்டு நல்லிணக்கத்தை வளர்த்தெடுத்தார்.
அன்றைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, அவர்கள் கன்னியா குமரியில் “ஏக்தா ” ரத யாத்திரையை தொடங்கியபோது நாடார் சங்கமும், ஜிஹாத் கமிட்டியும், சேர்ந்து போஸ்டர் அடித்து கண்டன எதிர்ப்பை பதிவு செய்ததையெல்லாம் மறக்க முடியாது.
டாக்டர்.ராமதாசையும், திருமாவளவனையும், பாண்டிச்சேரியில் தனது மேடையில் ஒன்றாக சேர்த்து அமரவைத்து இணக்கத்தை பாபா அவர்கள்தான் ஏற்படுத்தினார்.
தமிழ்தேசிய சிந்தனைகளை இன்று அண்ணன் சீமான் போன்றவர்கள் பேசுகிறார்கள். அன்றே இதை தெளிவாக பாபா பேசினார். செந்துறை பொதுக்கூட்டத்தில் தமிழ் தேசியம் குறித்துப் பேசிய அவரது உரை ஒரு அரசியல் வகுப்பு போல இருக்கும்.
பாமகவை பட்டிதொட்டியெல்லாம் வளர்த்தெடுக்க அவர் பட்டபாடு அதிகம். ஊர் ஊராக சுற்றி பேசினார். அவரது தேதிக்காக பாமக சகோதரர்கள் காத்திருந்தனர். டாக்டர் ராமதாஸ் ஐயா, பேராசிரியர் தீரன், பு.த.இளங்கோவன், கோ.க.மணி, தலித் எழில்மலை, ஆகியோர் பாபாவின் பங்களிப்பை கண்டு மகிழ்ந்தார்கள்.
அவர் தனது பேச்சில் அறிவை, விழிப்புணர்வை தூண்டி பேசினார். அவர் வன்முறையை ஆதரிக்கவில்லை. டாக்டர் சேப்பன் அவர்கள் இதை அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார். அவர் எனது ஊருக்கு அருகிலுள்ள கருப்பம் புலத்தை சேர்ந்தவர்.
பாபாவின் உரைவீச்சு எதுகை, மோனையோடு இலக்கியமாகவும் இருக்கும். யதார்த்தமாகவும் இருக்கும். அழகிய தமிழும், சரளமான ஆங்கிலம் சேர்ந்து வெளிப்படும்.
” வெங்காட்டு சிறைகள் ..எங்களுக்கு வெண்ணிலா அறைகள்” என்பார். இப்படி நிறைய உதாரணங்களை சொல்லலாம்.
அவர் தலைவர், பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், ஆய்வாளர் என பல ஆற்றல்களை கொண்டவர்.
அவரது அல் முஜாஹிதீன், முக்குல முரசு, புனித போராளி போன்ற பத்திரிக்கைகள் விழிப்புணர்வை தந்தன.
இன்று ஒரு பொதுக்கூட்டம் போட பல முயற்சிகள் செய்து மக்களை கூட்டுகிறோம். வாட்ஸ்அப், பேஸ்புக் இல்லாத, ஊடக ஆதரவு இல்லாத அக்காலக்கட்டத்தில், பாபா பேசுகிறார் என தெரிந்தால் 100 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் தன்னெழுச்சியாக திரள்வார்கள்.
ஒரு மனிதரை ; ஒரு தலைவரை : அவரின் சிந்தனைகளை அறிய அவரது கடைசி நாட்களை ஆய்வு செய்ய வேண்டும். பாபா அவர்களின் முதிர்ச்சியை, அக்கறையான கருத்துகளை அவரது கடைசி மூன்று உரைகளின் மூலம் அறியலாம். அத்திக்கடை, திட்டச்சேரி, தேவிப்பட்டிணம் ஆகிய மூன்று ஊர்களில் கடைசியாக பேசினார்.
அந்த 3 உரைகள் அவரது சிந்தனை முதிர்ச்சிகளை காட்டும், அதில் அவர் கடைசியாக எனது தொகுதியான திட்டச்சேரியில் தான் பேசினார்.
அவர் கலைஞர், எம்.ஜி.ஆர். என்ற இரு முதல்வர்களோடு நெருக்கமாக பழகினார் . அவர் எந்த ஆதாயமும் பெறவில்லை. அவரது மரணத்திற்கு பிறகு அவரது பழைய ஜீப், மட்டுமே மீதமிருந்தது.
அவர் சங்பரிவார ஆதரவாளர்களால் கொல்லப்பட்டது துயரமானது. பொள்ளாச்சியில் ஒரு கவுண்டர் சமுதாய நண்பர் வீட்டில் இருந்த போதுதான் எதிரிகள் வீழ்த்தினார்கள்.
நான் அப்போது புதுக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்றேன். ரமலான் நோன்பு ஒன்றை நிறைவு செய்த மாலை நேரத்தில் அந்த துயர செய்தி வந்தது.
பாபா அவர்களின் தியாகங்கள் வீண் போகவில்லை. அவரது உரைகள் இன்று கார் பயணங்களில் பலருக்கும் துணைவனாக ஒலிக்கிறது. அவரது கருத்துகள் விழிப்புணர்வை ஊட்டிய வண்ணம் உள்ளது.
இன்று அவரது நினைவேந்தலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்கின்றனர். தமிழகம் எங்கும் அவருக்காக கூட்டம் போட்டால் மக்கள் திரள்வார்கள்.
அவர் குறித்து ஒரு வரலாற்று புத்தகம் வெளிவர வேண்டும். ஒரு ஆவணப்படமும் தயாரிக்கப்பட வேண்டும்.
அவர் கொள்கைகளின் வழியாக சமூகநீதியை, நல்லிணக்கத்தை கட்டியமைத்து, இம்மக்களை அரசியல்படுத்துவோம் என்று கூறி உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், MGK நிஜாமுதீன், குடந்தை அரசன், மீ.த. பாண்டியன், தடா.ரஹீம், நவ்சாத், இளமாறன் உள்ளிட்ட பலரும் பேசினார்கள்.
மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், திண்டுக்கல் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சாந்து முஹம்மது, MJTS மாநில செயலாளர் கோவை ஜாபர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், துணை செயலாளர் கோவை. சம்சுதீன், கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ், தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மஜகவினரும் பங்கேற்றனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திண்டுக்கல்_மாவட்டம்