ஜன.20,
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற தேவையில்லை என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து அதை அரசிதழிலும் வெளியிட்டுள்ளார்கள்.
இதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் மரக்காணம் தொடங்கி வேதாரண்யம் வரை சுமார் 5000 கிலோமீட்டர் பரப்பளவிலும், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் உட்பட்ட இடங்களில் சுமார் 41 கிலோமீட்டர் பரப்பளவிலும் குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான வேதாந்தா மற்றும் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஆகியவற்றுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
37 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு மத்திய அரசு திட்டம் வகுத்திருக்கிறது.
அதன்படி இதுவரை விளைநிலங்களில் 15 கிணறுகளை தோண்ட சுற்றுசூழல் துறையின் ஒப்புதலும் தரப்பட்டுள்ளது.
மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இப்பணிகள் தொடங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதற்கு சுற்றுச்சூழல் துறையின் ஓப்புதல் பெற தேவையில்லை என்ற புதிய நிலைபாட்டின் மூலம் மத்திய அரசு மக்களின் மீது போர் தொடுத்திருக்கிறது.
சுமார் 60 இலட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை பறித்து அவர்களை அகதிகளாக மாற்றும் இந்த நாசகார திட்டத்தை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
மக்களே களம் இறங்கி புரட்சிகர போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
தென்னிந்தியாவிற்கு சோறு போடும் பசுமையான காவிரி சமவெளியை பாலைவனமாக்கும் இந்த முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசு இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பினை கொள்கை வடிவத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
20/01/2020