(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை..)
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தொடர் போராட்டத்தின் நூறாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்ற தூத்துக்குடியிலுள்ள 18 கிராம மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உரிமைக்காக போராடிய பொதுமக்கள் மீது , துப்பாக்கி சூடு நடத்தியது நம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என்கிற அச்சத்தை எழுப்புகின்றது. இக்கொடுஞ் செயலை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
சுற்றுச்சூழலுக்காகவும், மண்ணுரிமைக்காகவும் உணர்வுப்பூர்வமாக போராடிய அம்மக்களின் நியாயத்தை உணரத்தவறியது அரசு இயந்திரங்களின் குற்றமாகும். நம்பிக்கை இழந்த மக்கள் வீதிகளில் அணிதிரள்வது என்பது ஜனநாயத்தின் ஒரு அம்சமாகும் . அதில் சிலர் வரம்புமீறல்களில் ஈடுபடும்போது, அதை இலகுவாக கையாண்டிருந்திருக்க வேண்டும் . அதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன.
ஆனால் காக்கை, குருவிகளை சுடுவதுபோல ஈவு இரக்கமற்ற முறையில் போராட்டகாரர்களை சுட்டுக்கொன்றிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதுபோன்ற சம்பவங்கள் இனி அங்கு நிகழாமல் இருக்க , தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் முடிவை எடுக்க வேண்டும்.
துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் அரசு நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என மஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
22.05.2018