நீதியின் சிகரம் ராஜேந்திர சச்சார் மறைவு! மஜக இரங்கல்..!!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வெளியிடும் அறிக்கை..)

டெல்லி உயர் நீதிமன்ற முனனாள் தலைமை #நீதிபதி #ராஜேந்தர்_சிங்_சச்சார் (94) முதுமை காரணமாக டெல்லியில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

அவர் நேர்மையின் அடையாளமாய், நீதியின் சிகரமாய் தனது பணிக்காலத்தில் வாழ்ந்து சென்றார்.

அவரது தீர்ப்புகள் யாவும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஓய்வு பெற்ற பிறகு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக குடிமக்கள் சுதந்திரத்திற்கான சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுத்தார்.

அதனடிப்படையிலேயே இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூலம் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக ராஜேந்திர சிங் சச்சார் இருந்தார்.

இந்திய முஸ்லிம்களின் வாழ்நிலை, தலித்துகளின் நிலையைவிட மோசமாக இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது. அந்த அறிக்கையின் ஆதார தகவல்கள் நாட்டையே உலுக்கியது. அந்த அறிக்கை நாடெங்கிலும் விவாதிக்கப்பட்டு அதன் பல அம்சங்கள் பல மாநிலங்களில் அமலுக்கு கொண்டுவரப்பட்டன.

கடந்த 2013 ஆம் ஆண்டு அவரை டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பத்திரிக்கையாளர் அத்தேஸ் அவர்களும் உடனிருந்தார். சச்சார் கமிட்டி ஆய்வுக்காக தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு இந்தியாவின் இருபது கோடி முஸ்லிம்களும் உங்களுக்கு நன்றிகடன் பட்டிருக்கின்றார்கள் என்று நான் கூறியபோது, நான் என் கடமையைத்தான் செய்தேன் என்று அடக்கத்துடன் அவர் கூறினார்.

விளிம்பு நிலை மக்களுக்காகவே வாழ்ந்து சென்ற அந்த உயர்ந்த மனிதரின் சிறப்புகளை போற்றிக்கொண்டே இருப்போம்.

அவரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் பங்கு கொள்கிறோம்.

இவன்:
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
21/04/2018