ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை..! தமிழக அரசுக்கு தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கூட்டறிக்கை..!!!

image

(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA மூவரும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை)

10 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம்.

முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்களிடம்  இதுப்பற்றி கூறியபோது கனிவுடன் பரிசீலிப்பதாக கூறியிருந்தார்.

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி சண்முகம் அவர்களிடமும் இது குறித்து தொடர்ந்து  வலியுறுத்தி வந்தோம். அவர்கள் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று (31.12.2017)திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், 60 வயதை கடந்த கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வோம் என மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கண்ணீரில் வாடிய ஆயிரக்கணக்கான குடும்பங்களிள் வாழ்வில் மாண்புமிகு  திரு.எடப்பாடியார் அவர்கள் வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

 இதன் மூலம் அவர் வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறார்.

மனிதநேயத்துடன் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு உத்தரவிட்ட மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், இதற்கு எல்லா வகையிலும் துணை நின்ற சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.C.V.சண்முகம் அவர்களுக்கும், அதிமுக அரசின் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

“பொன் மனச் செம்மல்” டாக்டர் MGR அவர்களின் நூற்றாண்டு விழா இதன் மூலம் சிறப்படைந்திருக்கிறது.
மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி, மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் அரசு கருணை மிக்கது என்பதை நிரூபித்திருக்கிறது.

சட்ட மன்றத்தில் இக்கோரிக்கைக்கு  ஆதரவளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், களத்தில் தொடர்ந்து போராடிய தலைவர்களுக்கும், அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

(இதில் வழக்கு பேதமின்றி மேற்கண்ட தகுதிக்கு உட்பட்ட அனைவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்)

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_ MLA,
#உ_தனியரசு_MLA,
#கருணாஸ்_MLA.
31.12.2017