இனியாவது காவிரியில் தண்ணீர் கிடைக்குமா?

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..)

தேர்தலுக்கு முந்தைய எதிர்பார்ப்பின் படியே கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்திருக்கிறது. பாஜக அதிக இடங்களைப் பெற்ற போதிலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அருதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று கர்நாடக விசன் போன்ற அமைப்புகள் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் கட்சியின் தலைமை அதை நிராகரித்தது. தங்களின் சாதனைகள் போதும் என்ற கற்பனையில் காங்கிரஸ் கட்சி மிதந்தது.

தேவகவுடா அவர்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் உவைசியின் M.I.M கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்தார். மேலும் மலையாளிகள் மற்றும் தெலுங்கர்களின் கணிசமான ஆதரவையும் பெற்றார். அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பெருமளவு பாதித்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் பாஜக 30 இடங்களில் கூட வென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

இருப்பினும் பாஜகவின் மதவெறி- ஊழல் ஆட்சி கர்நாடகாவில் அமையவிடாமல் தடுக்கும் முயற்சியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் இறங்கி வந்தது பாராட்டத்தக்கது.

எது எப்படி இருந்தாலும், கர்நாடகாவில் அமையவிருக்கும் ஆட்சி,காவிரி ஆற்று நீர் உரிமையில் தமிழகத்தின் நியாயமான பங்கினை தரும் கடமை புதிய அரசுக்கு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் சார்பில் நினைவூட்டுகிறோம்.

கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இனியும் நாடகமாடாமல், மத்திய அரசு, வலிமை வாய்ந்த அதிகாரங்களுடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவண் :
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
(15-05-2018)