மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா! தொண்டர்களுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கடிதம்…

ஆருயிர் மனித நேய சொந்தங்களே…
ஏக இறைவன் அமைதியும், ஆசியும் உரித்தாகுக!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, பிப்-28, 2018 அன்று உலகெங்கும் வாழும் மனிதநேய சொந்தங்களால் கொண்டாடப்படுகிறது!

உற்சாகத்தோடும், கொள்கை முழக்கங்களோடும் தொடங்கப்பட்ட இந்த அரசியல் பேரியக்கம், இன்று வெற்றிகரமாக; தீர்மானிக்கப்பட்ட திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

கடினமான பாதையில், எதிர்ப்புகளோடு பயணிக்கப்போகிறோம் என்பது தெரிந்தும், பல்லாயிரக்கணக்கானோர் நமது பயணத்தில் இணைந்தனர். அது தியாகமிக்க நெடும் பயணமாக இப்போது மாறியிருக்கிறது.

கணிவுடன் கூடிய அணுகுமுறை, மனிதநேயத்துடன் கூடிய அரசியல், உறுதியான நிலைப்பாடுகள், நம்பிக்கை நிறைந்த முழக்கங்கள், பகையை பந்தாடி வீழ்த்தும் போர்குணம், தியாக உணர்வுடன் ஆற்றும் சேவைகள் இவைதான் நமது அசைக்க முடியாத சொத்துக்களாக இருக்கின்றன. அதனால்தான் நமது வெற்றி பயணம் மக்கள் ஆதரவோடு தொடர்கிறது.

அழுக்கும், போட்டியும், பொறாமையும் நிறைந்த அரசியல் உலகில், அனைவரோடும் நாகரிகமான உறவை நாம் பேணி வருகிறோம்.

பழிவாங்கும் குணாதிசயத்தை புதை குழியில் புதைத்து விட்டு, பண்பான அரசியலை நிலைநாட்டி வருகிறோம். அச்சமூட்டும் அரசியல் மூலம் பலம் காட்ட நினைப்பவர்களுக்கு மத்தியில், அரவணைக்கும் அரசியலை விதைத்து வருகிறோம்.

இவையெல்லாம் நமது மனிதநேய அரசியலின் வெளிப்பாடுகள் என்பதால் தான், மாற்று முகாமில் இருக்கும் தலைவர்களும், தொண்டர்களும் நம்மை பாராட்டுகிறார்கள். நம்மிடம் அன்பையும், மரியாதையையும் வெளிக்காட்டுகிறார்கள்.

சொந்தங்களே…
நமது கட்சி என்பது
தங்க முலாம் பூசிய அன்பினால் கட்டப்பட்ட கோட்டையாகும், எனவேதான் ஒவ்வொரு தொண்டரின்
உணர்வையும் பனி குடத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம்.

இங்கு அலைபாயும் ‘வேடந்தாங்கல்’ பறவைகளுக்கும் ,”வேடம்” தாங்கும் பறவைகளுக்கும் இடமில்லை. இங்கு கொள்கை போர்வாளை சுழற்றும் தியாக மிக்க தீரர்கள் மட்டுமே நிலைக்க முடியும்.

அத்தகையை உணர்வோடு; சமூக நீதி, நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற நமது லட்சிய கொள்கைகளை காக்க ; அறவழியில் தொடர்ந்து போராடுவோம் என்பதை இந்நாளில் உறுதியேற்போம்.

பிப்ரவரி-28 தொடங்கி, மார்ச்-15 வரை நமது மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி; பொதுக்கூட்டங்கள், தெருமுனை பரப்புரைகள், கொடியேற்று நிகழ்ச்சிகள், கருத்தரங்கள், இலவச மருத்துவ முகாம்கள், மரக்கன்று நடுதல், நலத்திட்ட உதவிகளை வழங்குதல், ஆதரவற்றோர்களுக்கு உதவிகள் என பயனுள்ள வகையில் பணியாற்றிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சொந்தங்களே…
இது உங்களின் கட்சி!
உங்களால் வளர்க்கப்படும் கட்சி!

இங்கு எல்லோரும் தலைவர்களைப் போல் சிந்திப்போம்;
தொண்டர்களைப் போல உழைப்போம் என்பதை புரிந்துக்கொண்டு; நமது மூன்றாம் ஆண்டு பயணத்தை இறையருளால் தொடங்குவோம்.

ஆதிக்க அரசியலை வேரறுப்போம்!
மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம்!

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
27/02/2018.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.